×

குடிபோதை தகராறில் விபரீதம் கல்லால் தாக்கியதில் வாலிபர் படுகாயம்: கார் டிரைவர் கைது

அண்ணா நகர்: அமைந்தகரையில் குடிபோதை தகராறில் ஒரு வாலிபரை கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக கார் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை அமைந்தகரை, டி.பி கார்டன் 6வது தெருவை சேர்ந்தவர் முருகன் (40). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் ஒரு கோயில் வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அங்கு குடிபோதையில் அப்பகுதியை சேர்ந்த கார்டிரைவர் சதீஷ் (எ) ஜில்லா சதீஷ் (31) என்பவர் தள்ளாடியபடி நடந்து வந்தார்.

கோயில் வாசலில் தூங்கிய முருகனை எழுப்பிய சதீஷ், வாய்த்தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றியதில், அங்கிருந்த கல்லை சதீஷ் எடுத்து, முருகனின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் முருகன், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லால் தாக்கிய கார் டிரைவர் சதீஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : attack , In drunken disputes, disaster, stoned, young, injured
× RELATED இடி தாக்கி பெண் விவசாயி பலி