×

லாரி மோதி துப்புரவு தொழிலாளி பலி நகராட்சி அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை: இழப்பீடு வழங்க கோரிக்கை

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை ஜிஎஸ்டி பிரதான சாலையில் நேற்று  முன்தினம் அதிகாலை துப்புரவு பணியில் அனகாபுத்தூர், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த முருகன் (35), அவரது மனைவி கலைவாணி (33) மற்றும் அவரது மைத்துனர் கதிரவன் (24) உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி துப்புரவு தொழிலாளர்கள் மீது மோதியது. இதில் முருகன் உயிரிழந்தார். கலைவாணி, மைத்துனர் கதிரவன் படுகாயமடைந்தனர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து, லாரி டிரைவர் சங்கர் (54) என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று காலை முருகனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த எஸ்ஐக்கள் அசோகன், குமாரவேலு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி இழப்பீடு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அதனையடுத்து பொதுமக்கள் போராட்டதை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் கூறுகையில், ‘‘முருகன் குடும்பத்திற்கு அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். அஜாக்கிரதையாக செயல்பட்ட பல்லாவரம் துப்புரவு ஒப்பந்ததாரர் தனியாக 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Lorry collision cleaning worker ,office relatives ,siege , Truck collision, cleaning worker, siege, compensation
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...