×

அமைச்சர் தொடங்கி வைத்த சிறிது நேரத்தில் கூட்டு குடிநீர் திட்டம் முடங்கியது:

* திமுக எம்எல்ஏ நேரில் ஆய்வு
* அரசிடம் முறையிடுவதாக உறுதி

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் ஊரக வளர்ச்சி சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து சென்ற சிறிது நேரத்தில் கூட்டு குடிநீர் திட்டம் தண்ணீர் வராமல் முடங்கியது. இதனை நேரில் ஆய்வு செய்த திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஒரு வாரத்திற்குள் இப்பணிகள் துரிதமாக நடக்க அரசிடம் முறையிட இருப்பதாக அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.  
     
தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தண்ணீர் பிரச்னையை தீர்க்க ரூ.3 கோடியில்  கூட்டு குடிநீர் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மாடம்பாக்கம் மற்றும் சிட்லப்பாக்கம் பகுதி மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு 16 லட்சம் லிட்டர் தண்ணீர் சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்கும், 4 லட்சம் லிட்டர் தண்ணீர் மாடம்பாக்கம் பேரூராட்சிக்கும் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்தின்படி மாடம்பாக்கம் ஏரியில் 5 கிணறுகள் தோண்டும் பணிகள் நடைபெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவு பெற்றது.  

இந்நிலையில் நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால் அந்த குடிநீர் அழுக்காக குடிப்பதற்கு பயன் இல்லாதவாறு இருந்தது. அதுமட்டுமின்றி அவர் திட்டத்தை துவக்கி வைத்து சென்ற ஒரு மணி நேரத்தில் தண்ணீர் வரவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் புகாரளித்தனர். இதையடுத்து நேற்று காலை தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மக்களுக்கு சீரான குடிநீர் ஒரு வாரத்தில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துவிட்டு சென்றார்.

இதுகுறித்து திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கூறுகையில், ‘‘இங்கு அவசரம் அவசரமாக உள்ளாட்சித்துறை அமைச்சர், ஊரக தொழிற்துறை அமைச்சர் ஆகியோர் கூட்டு குடிநீர் திட்டத்தை திறந்து வைத்துள்ளனர். ஆனால் துவக்கி வைத்த ஒரு மணி நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து புகார் வருகிறது. அமைச்சர் திறந்து வைத்த குடிநீர் திட்டம் மக்களுக்கு பயன் இல்லாத வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் வரவில்லை என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது.

இங்குள்ள பொதுமக்களும், நலச்சங்க நிர்வாகிகளும் தண்ணீர் சரியாக விநியோகம் செய்யவில்லை என்ற கருத்தை எண்னிடம் சொன்னார்கள். ஆனால் நேரடியாக வந்து பார்த்தபோது தான் தெரிகின்றது. இங்கு 2 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 3 இடத்தில் தண்ணீர் லீக் ஆகிறது.

சிட்லப்பாக்கம் பகுதியில் இருக்கின்ற பகுதி மக்கள் விழிப்பிணர்ச்சியுடன் இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கூட சிட்லப்பாக்கம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் கழிவுநீர் கலந்து மிகவும் மோசமாக உள்ளதாக பொதுமக்கள் அதனை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பணிகளை தடுக்கக்கூடிய ஒரு நிலை உள்ளது.  

அதேபோல் செம்பாக்கம் பகுதியிலும் ஒரு நிலை உள்ளது. எனவே, இந்த குடிநீர் திட்டத்தை பொறுத்தவரை குடிப்பதற்கு உகந்ததாக கொடுக்க வேண்டும். எனவே மாவட்ட ஆட்சியரிடமும், திமுக தலைமை இடத்திலும் இதை புகாராக சொல்லி நல்ல குடிநீராக மாற்ற என்ன வழியோ? அதற்கு என்ன பணம் தேவைப்படுகிறதோ? அதை நாடாளுமன்ற உறுப்பினர் கொடுக்க தயாராக இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த பணிகள் துரிதமாக நடக்க அரசிடம் முறையாக நான் எடுத்து சொல்வேன்’’ என்றார்.


Tags : Minister , The Minister started, and, for a time, the joint drinking water project was stalled
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...