×

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட புதிய அமைப்பு துவக்கம்: அனைத்து கட்சியினரும் பங்கேற்பு

சீர்காழி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த சீர்காழி காவிரி படுகை பாதுகாப்பு இயக்கம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில் விரைவில் போராட்டம் தொடங்கும் என அறிவித்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கும், ஓஎன்ஜிசிக்கும் அனுமதி வழங்கி உள்ளது. அவர்கள் இதற்கான பணிகளை தொடங்க உள்ளனர். இப்பணிகள் தொடர்ந்தால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அழிந்து விடுவதுடன், விவசாய நிலங்கள் பாலைவனமாகி குடிநீருக்கே மக்கள் அவதிப்படும் நிலை உருவாகும். எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடந்து வருகிறது. பா.ஜ, அதிமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடி வருகிறது.

அனைத்து கட்சிகள் சார்பில் வரும் 12ம் தேதி மரக்கணாம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சீர்காழி பகுதியில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க ‘’ சீர்காழி காவிரி படுகை பாதுகாப்பு இயக்கம்’’ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைப்பு கூட்டம் சீர்காழியில் நடந்தது. பெரியார் திராவிடர் கழகம் இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. இதில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 36 இயக்கங்களின் முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர். இவ்வியக்கத்திற்கு கரும்பு விவசாய சங்க தலைவர் இமயவரம்பன் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.எஸ்.மணி, காங்கிரஸ் முன்னாள் நகராட்சி தலைவர் கனிவண்ணன், மதிமுக நகர செயலாளர் சத்யராஜ் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செல்லப்பன், மனிதநேய மக்கள் கட்சி முசாகுதீன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை குணசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

விரைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கருத்தரங்கம், பொதுக்கூட்டம், பரப்புரை பயணம், ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவதென்று கூட்டு இயக்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. 8 பேர் கைது: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுக்க ேபாலீசாரின் அனுமதியின்றி மன்னார்குடியில்  ஆலோசனை கூட்டம் நடத்த முயற்சித்த டெல்டா புலிகள் அமைப்பை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : organization ,parties , Hydro carbon, new system, participation
× RELATED ‘உங்க சங்காத்தமே வேணாம்’ உலக சுகாதார...