×

ஈரோடு தனியார் மருத்துவமனை பெயரில் முறைகேடு: கிட்னி விற்றால் ரூ3 கோடி

ஈரோடு: ஈரோட்டில் தனியார் மருத்துவமனை பெயரில் போலி பேஸ்புக் அக்கவுன்ட் தொடங்கி கிட்னி விற்றால் ரூ3 கோடி தருவதாக கூறி லட்சக்கணக்கில் வசூல் செய்த கும்பல் மீது வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இதில், முன்னாள் ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். ஈரோடு சம்பத் நகரில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் பெயரில் சில மாதங்களுக்கு முன்பு போலியாக பேஸ்புக் அக்கவுன்ட் தொடங்கப்பட்டு கிட்னியை மருத்துவமனையில் விற்பனை செய்தால் ரூ3 கோடி தருவதாகவும், விருப்பம் உடையவர்கள் பதிவு செய்ய முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைநம்பி ஐதராபாத்தை சேர்ந்த ஷரவந்தி என்ற பெண், முன்பணமாக ரூ15 ஆயிரத்தை பேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்டிருந்த மர்மநபர்களின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.

அதன்பின் அந்த பெண்ணுக்கு பதில் வரவில்லை. இதனால், மருத்துவமனையின் டாக்டரை தொடர்பு கொண்டு, கிட்னி தானம் செய்தால் ரூ3 கோடி தருவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த கோரியதால் வங்கி கணக்கில் ரூ15 ஆயிரம் செலுத்தி உள்ளேன்’ என்றும் தெரிவித்தார். அதற்கு டாக்டர், எங்கள் மருத்துவமனையில் அப்படி ஒன்று அறிவிக்கப்படவில்லை’ என்று பதில் கூறினார். பின்னர், நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன்பின், மருத்துவமனை நிர்வாகம் விசாரித்ததில் போலி கணக்கு தொடங்கி 100-க்கு மேற்பட்டோரிடம் பணம் வசூலித்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனர், எஸ்.பி. சக்திகணேசனிடம் நேற்று முன்தினம் இரவில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மார்ச் 3ம் தேதி எங்கள் மருத்துவமனை டாக்டருக்கு பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்தது. அப்ேபாது பேசியவர்கள், கிட்னி தானம் செய்ய தயாராக இருப்பதாகவும், அதற்கு என்ன வழிமுறை? எனவும் கேட்டனர். இவர்களில், ஐதராபாத்தை சேர்ந்த ஷரவந்தி என்ற பெண், டாக்டரை தொடர்பு கொண்டு, உங்கள் மருத்துவமனைக்கு கிட்னி தானம் செய்தால் ரூ3 கோடி தருவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த கோரியதால் அதில் கூறிய வங்கி கணக்கில் ரூ15 ஆயிரம் செலுத்தினேன் எனவும் தெரிவித்தார்.

பிறகு விசாரித்ததில் எங்கள் மருத்துவமனை பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி கிட்னி விற்பனை ேமாசடியை நடத்தி பலரிடம் பணம் வசூலித்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இந்த மோசடியால் குடும்ப கஷ்டத்திற்காக தங்களது கிட்னியை விற்க தயாராக இருந்தவர்கள் பணம் கட்டி ஏமாந்துள்ளனர். எனவே, மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க எஸ்பி சக்திகணேசன், வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோசடியில் முன்னாள் ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

போலீசாரின் குறுந்தகவலுக்கு பணம் அனுப்பும்படி பதில்

இந்த மோசடி குறித்து பேஸ்புக் பக்கத்தை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, டாக்டர்கள் விபரம், மருத்துவமனையில் உள்ள சிறப்பு வசதிகள் போன்ற பல்வேறு தகவல்களை பதிவிடப்பட்டிருந்தது. இந்த விபரங்கள் அனைத்தும் உண்மையானவை. ஆனால், முன்பதிவு கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரங்களை மட்டும் மோசடி கும்பலினர் அவர்களது எண்களை கொடுத்துள்ளனர். மேலும், வடமாநிலத்தில் இருந்து போலி பக்கம் உருவாக்கப்பட்டதும் தெரியவந்தது. உடனே, முன்பதிவுக்காக அந்த செல்போன் எண்ணுக்கு போலீசார் எஸ்.எம்.எஸ். அனுப்பினர். ஆனால், அந்த நபரின் அக்கவுண்ட் எண் அனுப்பி முன்பணம் செலுத்தும்படி பதில் அனுப்பி வருகின்றனர். இதையடுத்து, அந்த பக்கத்தை சைபர் கிரைம் மூலம் போலீசார் முடக்கினர்.

Tags : Erode Private Hospital , Erode, private hospital, abuse, kidney, Rs 3 crore
× RELATED கருமுட்டை விற்பனை விவகாரம் ஈரோடு...