×

மன்னார்குடியில் திடீரென உள்வாங்கியது அரசு தலைமை மருத்துவமனை கட்டிடம்

மன்னார்குடி: மன்னார்குடி  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு  கட்டிடத்தில் நேற்று காலை திடீரென சுவர்களில்  விரிசல் ஏற்பட்டு கட்டிடத்தின் ஒரு பகுதி அரை அடி ஆழம் சாய்ந்த நிலையில் உள்வாங்கியது. இதனால் ஆஸ்பத்திரியில் இருந்த 200 நோயாளிகள் உயிர் தப்பினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 49 ஆண்டு ஆகியுள்ளதால் பழுதடைந்துள்ளது. நேற்று காலை இந்த கட்டிடத்தில் நோயாளிகள், உடன் வந்தோர் மற்றும் ஊழியர்கள் என 250 பேர் இருந்தனர். ஓபி சீட்டு வாங்க நோயாளிகள் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது திடீரென கட்டிடத்தின் பின்புறம்  இருந்த மேற்கூரை தகரம் டமார் என விழும் சத்தம் கேட்டது.

இதனால் நோயாளிகள், ஊழியர்கள் பீதியில் அலறியடித்து வெளியே  ஓடிவந்து பார்த்த போது கட்டிடத்தின் முன் பகுதியில் சுவர்களில்  விரிசல் ஏற்பட்டு ஒரு பகுதி  அரை அடி ஆழம் சாய்ந்த நிலையில் உள்வாங்கியது. இரும்பு  ஜன்னல் கம்பிகள் வளைந்தது. சித்தா பிரிவில் டைல்ஸ் தளம் உடைந்து சேதமடைந்தது. உடனே, நோயாளிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். பின்னர், நோயாளிகளும் ஊழியர்களும் வெளியேறினர். இதுகுறித்து தகவலறிந்த மன்னார்குடி ஆர்டிஓ புண்ணியகோட்டி, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் உமா,  தலைமை மருத்துவமனை  கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், பொதுப்பணித்துறை மாவட்ட செயற்பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறுகையில், `இந்த கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை சரியில்லாததால்  கட்டிடத்தை இடிக்கக்கோரி கடந்த 15 நாட்களுக்கு முன்பே மருத்துவமனை சார்பில் திருவாரூர் மாவட்ட சுகாதாரதுறை துணை இயக்குனர் டாக்டர் உமாவிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கட்டிடம் இடிக்கப்படும். அதற்குள் எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சுவர்கள் சேதமடைந்தது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் யாருக்கும் காயம் இல்லை. அனைவரும் பாதுகாப்பாக தப்பினர்’ என்று கூறினார்.

Tags : government headquarters building ,Mannar , Mannargudi, Government Chief Hospital, Building
× RELATED பாம்பனில் தெற்கு கடல் திடீரென உள்வாங்கியது