அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை

சென்னை: தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் நேற்று கூறியதாவது: கேரளாவில் கடந்த முறை நிபா வைரஸ் தாக்கியபோதும், வட மாநிலங்கள், அண்டை மாநிலங்களில் ஜிகா வைரஸ் தாக்கியபோதும் தமிழகத்தில் அதன் தாக்கம் இல்லை. தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை. தாக்குதல் இல்லாத நிலையை தொடர்ந்து உறுதிப்படுத்த அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. கால்நடைத்துறை, வருவாய்த்துறை உள்பட பல துறைகளுக்கு கடிதம் எழுதி உஷார்படுத்தியுள்ளோம்.

நிபா வைரஸ் வவ்வால் கடித்த பழங்கள் மூலம் ஒரு மனிதருக்கும், ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவுகிறது. அதனால் பொதுமக்கள் பழங்களை சாப்பிடும் முன் நன்றாக கழுவி சுத்தப்படுத்தியபின் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட வார்டு வசதி, காய்ச்சலுக்கான சிறப்பு வார்டு வசதி நம்மிடம் உள்ளது. மாவட்ட சுகாதார அதிகாரி, டீன்கள், டாக்டர்களை உஷார்படுத்தியுள்ளோம். குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களுக்கு கூடுதல் மருத்துவ இயக்குனர் தலைமையிலான குழு செல்கிறது. இதுதவிர நடமாடும் மருத்துவக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரக்கூடியவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள ஸ்கிரீனிங் சென்டர்களை அமைத்துள்ளோம்.
 
தமிழகம் முழுவதும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக தினசரி அறிக்கை பெறப்படுகிறது. அதிக அளவில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டால் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அவ்வாறான பாதிப்பு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இதற்காக 104 இலவச மருத்துவ ஆலோசனை எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொண்டு தகவல் பெறலாம். 044- 24334811 கண்காணிப்பு அறையையும் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

× RELATED `நிபா’ அறிகுறியால் அனுமதி ஜிப்மரில்...