×

கேரளாவை மீண்டும் மிரட்டும் ‘நிபா’ காய்ச்சல் தமிழக செக்போஸ்ட்களில் மருத்துவ குழுக்கள் சோதனை

கம்பம்: கேரளாவில் கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்திற்குள் நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு தமிழக எல்லைப்பகுதியான கம்பம்மெட்டு, லோயர்கேம்ப் சோதனைச்சாவடிகளில், கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை தேனி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவக்குழுவினர் தீவிர சோதனை செய்கின்றனர். கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த ஆண்டு ‘நிபா’ என்ற கொடிய வைரஸ் காய்ச்சலால் 17 பேர் பரிதாபமாக இறந்தனர். அதன் பிறகு இந்த காய்ச்சல் கட்டப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் கேரள மாநிலம் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட இடுக்கி மாவட்டம், தொடுபுழாவைச் சேர்ந்த கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த வாலிபருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. இருப்பினும் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதி என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லைப்பகுதிகளில், மருத்துவக்குழுவினர் கேரளாவில் இருந்து வருபவர்களை சோதனை செய்து வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து அடிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக தேனி மாவட்ட எல்லைப்பகுதிகளான கம்பம்மெட்டு பழைய போலீஸ் சோதனைச்சாவடி, லோயர்கேம்ப் பஸ் ஸ்டாண்டு பகுதிகளில் தேனி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவிலிருந்து வாகனங்களில் வருபவர்களிடம் காய்ச்சல் அறிகுறிகள் இருக்கிறதா என சோதனை செய்து வருகின்றனர். இதேபோல், கோவை, கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

Tags : Kerala ,Tamil ,teams , Kerala, 'Niba' fever, Tamil Nadu seafront, Medical groups, testing
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...