×

50% மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கலாம்: நர்ஸ்களை எம்பிபிஎஸ் படிப்பில் நேரடியாக 2ம் ஆண்டில் சேர்க்கலாம்

புதுடெல்லி: நர்சிங் மற்றும் பல் மருத்துவ பட்டதாரிகள், எம்பிபிஎஸ் படிப்பில், பிற்சேர்க்கை என்ற அடிப்படையில் 2ம் ஆண்டில் இருந்து சேருவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டுமென தேசிய கல்விக் கொள்கை வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக, கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர்கள் குழு சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வரைவு அறிக்கையை சமர்பித்தது. இதில் கூறப்பட்டிருந்த மும்மொழி திட்டம் கடும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், இந்த அறிக்கையில் மேலும் பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது,  மருத்துவ படிப்பிலும் பல்வேறு மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, எம்பிபிஎஸ் படிப்பில் நர்சிங், பல் மருத்துவம் உள்ளிட்ட இதர பிற மருத்துவ அறிவியல் பட்டதாரிகள் ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் சேருவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளது.

அதாவது, நர்சிங், பல் மருத்துவம் படித்த மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் நேரடியாக 2ம் ஆண்டிலோ அல்லது 3ம் ஆண்டிலோ சேர்ந்து படிக்கும் வாய்ப்பினை வழங்கலாம் எனக் கூறி உள்ளது. அதே சமயம் அவர்கள் நீட் நுழைத்தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டியதும் அவசியம்.  அதேபோல, மாணவர்களில் 50 சதவீதம் பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டுமென்றும், அதில் 20 சதவீதம் பேருக்கு முழு உதவித்தொகை வழங்கப்பட வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மருத்துவ படிப்பை நிறைவு செய்வோருக்கு 4ம் ஆண்டில் பொது இறுதி தேர்வு நடத்த வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை, மருத்துவ படிப்பை முடித்தவர்கள் அடுத்ததாக மருத்துவ தொழிலில் ஈடுபடுவதற்கான தகுதித் தேர்வாகவும் முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வாகவும் கருதலாம் என தேசிய கல்விக் கொள்கை வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags : Nurses , Scholarship, nurse, MBBS
× RELATED தமிழகத்தில் தற்காலிகமாக பணியாற்றி...