×

மத்திய அமைச்சரவையில் கர்நாடகா மூத்த எம்பிக்கள் புறக்கணிப்பு: சித்தராமையா அதிருப்தி

பெங்களூரு: மத்தியில் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் கர்நாடக மாநிலத்தில்  இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த எம்பிகளுக்கு அமைச்சரவையில்  வாய்ப்பு கொடுக்காமல் வஞ்சித்துள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா அதிருப்தி வெளிப்படுத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களவை தேர்தலில் துமகூருவில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடா தோல்வியடைந்ததற்கு நான் தான் காரணம் என்று சிலர் கூறி வருகிறார்கள். இது  உண்மைக்கு புறம்பானது. துமகூருவில் கவுடா தோல்விக்கு நான் காரணமாக இருந்தால், எனது சொந்த மாவட்டமான மைசூரு தொகுதியில் போட்டியிட்ட விஜயசங்கர் தோல்விக்கு யார் காரணமாக இருக்க முடியும்? தேர்தல் தோல்வி என்பது அவரவரின் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்தது. ஒட்டு மொத்தமாக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி என்பதை நாம் ஒப்புகொள்ள வேண்டும். அதை விட்டு விமர்சனம் செய்வது சரியல்ல.

மக்களவை தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. இதில் விஜயபுரா தொகுதியில் இருந்து ரமேஷ் ஜிகஜிணகியும், சாம்ராஜ்நகர் தொகுதியில் இருந்து சீனிவாசபிரசாத் ஆகிய இரு தாழ்த்தப்பட்ட பிரிவு தலைவர்கள் பாஜ  சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் 6 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் மத்திய அமைச்சர்களாக இருந்து அனுபவம் பெற்றவர்கள். இருப்பினும் அவர்களுக்கு மோடி அமைச்சரவையில் வாய்ப்பு வழங்காமல் வஞ்சித்துள்ளதுடன் அவர்களை விட ஜூனியர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு துரோகம் செய்துள்ளது.


Tags : MPs ,Union Cabinet ,Sitaramaya , Central Cabinet, Senior Embankment of Karnataka, Sitaramaya
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...