500 ஏக்கர் நிலம் மாயமான விவகாரம் கூடுதல் ஆணையர் குழு விசாரணை

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலம் மாயமான விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 40,117 கோயில்கள், 56 மடங்கள், 57 திருமடத்துடன் கூடிய கோயில்கள், 1721 குறிப்பிட்ட அறக்கட்டளைகள், 189 அறக்கட்டளைகள், 17 சமண திருக்கோயில்கள் உள்ளன. இதில், கோயில்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், மனைகள் உள்ளன. அவற்றில் ஒன்றான காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஆளவந்தார் சுவாமிகள் அறக்கட்டளை உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக மாமல்லபுரம், கடம்பாடி, சாலவான் குப்பம், பட்டிபுலம், கிருஷ்ணன்காரணை, சூளேரிக்காடு, பேரூர், நெம்மேலி, கோவளம் ஆகிய கிராமங்களில் 1,500 ஏக்கர் நிலங்கள் உள்ளன.

இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது பெயரில் பட்டா மாற்றி கொண்டு அந்த சொத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்று, அந்த கோயிலுக்கு சொந்தமான கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 500 ஏக்கர் நிலங்கள் வரை மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் அறநிலையத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோயில் சொத்துக்களை கண்டறியும் குழு ஆய்வு செய்தது. இதில், 500 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியிருப்பது தெரிய வந்தது. இந்த சொத்தின் மதிப்பு ரூ10 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டியிடம் இக்குழு அறிக்கை தாக்கல் செய்தது. இதை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கூடுதல் ஆணையர் ஒருவர் தலைமையில் இணை ஆணையர் கொண்ட குழு நியமனம் செய்து உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
இதை தொடர்ந்து, இக்குழுவினர் கோயில் அலுவலர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் முடிவில் பலர் சிக்க வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு உயர் அதிகாரிகள் சிலரை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இதற்காக, லட்சக்கணக்கில் பணம் தருவதாக அந்த உயர் அதிகாரிகளிடம் உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : 500 acres of land, magical affair, additional commissioner, team investigation
× RELATED உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை...