போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் புறநகர் பகுதி மக்கள் 4 ஆண்டுகள் ஆகியும் 50% கூட முடியாத 4 மேம்பால பணிகள்

சென்னை: நான்கு ஆண்டுகள் ஆகியும் 50 சதவீதம் கூட முடியாத 4 மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், சென்னை மாநகருக்குள் வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தாம்பரம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, மேடவாக்கம் உட்பட புறநகர் பகுதிகளில் இருந்து மாநகருக்குள் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்களால் அப்பகுதில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மேடவாக்கம் சந்திப்பு மற்றும் கோவிலம்பாக்கம் சந்திப்பு, பல்லாவரம் சிக்னல், வேளச்சேரி விஜயநகர் ஆகிய 4 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த 2012ல் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.

இதில், ரூ146 கோடி செலவில் வேளச்சேரி -தாம்பரம் சாலையில் மேடவாக்கம் சந்திப்பில் 3 கி.மீட்டரில் மேம்பாலம், கோவிலம்பாக்கம் சந்திப்பு மேம்பாலம், ரூ108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகரில் 1,400 மீட்டர் நீளத்தில் மேம்பாலம், ரூ68.36 கோடி செலவில் 1038 மீட்டர் நீளத்தில் மேம்பால கட்டுமான பணி கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. ெதாடர்ந்து பால திட்டத்திற்காக, நில எடுப்பு மற்றும் இழப்பீடு வழங்கும் பணி நடந்து வந்தது. இதை தொடர்ந்து மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இப்பணிகளை 2018ம் ஆண்டிற்குள் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது வரை நான்கு மேம்பால பணிகளும் 50 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமான பணிகள் நடந்து வருவதால்,  சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாநகர் பகுதி நோக்கி வரும் வாகனங்கள் வருவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. பாலப்பணிகளுக்காக ஆங்காங்கே சாலைகளில் பில்லர், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், பாலம் கட்டுமான பணி நடைபெறும் பகுதிகளை கடந்து வருவதற்கே பொதுமக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, காலை 8 மணி முதல் 10 மணி வரை பீக் அவர் காலகட்டங்களில் பாலப்பணிகள் நடைபெறும் இடங்களில் கடந்து வர குறைந்தது 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை காலதாமதம் ஆகிறது. மற்ற நேரங்களில் 20 முதல் 30 நிமிடங்கள் அந்த பகுதியை கடக்க காலநேரம் ஆகிறது. மேலும், பாலம் கட்டுமானம் நடைபெறும் பகுதிகளில் சர்வீஸ் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால், அவ்வழியாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

இந்நிலையில், தற்போது 4 மேம்பாலம் கட்டுமானம் நடைபெறும் இடங்களில் குறைந்த அளவு பணியாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை கொண்டு பால வேலைகளை முடிப்பது என்றால் இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆக வாய்ப்புள்ளது. முதல்வர் பொறுப்பு வகிக்கும் இந்த துறையிலேயே குறித்த காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்காமல் இழுத்தடித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, சென்னை புறநகர் பகுதியில் படிப்பு, பணி காரணமாக தினமும் லட்சக்கணக்கானோர் மாநகருக்குள் வந்து செல்கிறோம். அவ்வாறு வரும் போது பீக் அவர் நேரங்களில்  இந்த 4 மேம்பாலம் கட்டுமானம் நடைபெறும் பகுதிகளை தாண்டி வர குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணிநேரத்திற்கு மேல்வரை ஆகிறது. இதன் காரணமாக, தற்போது முன்கூட்டியே புறப்பட வேண்டியுள்ளது. அப்படியிருந்தும் குறித்த நேரத்திற்குள் சென்று சேர முடியவில்லை. தற்போது பாலம் நடைபெறும் பகுதிகளில் வேலை மெதுவாக நடந்து வருகிறது. இப்படியே நடந்தால் இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆக வாய்ப்புள்ளது. முதல்வர் துறையிலேயே பணிகள் இப்படி மெதுவாக நடந்தால் மற்ற துறைகளில் எப்படி பணிகள் வேகம் எடுக்கும். எனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாலப்பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டும். இந்தாண்டு இறுதிக்குள்ளாவது பாலப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூடுதல் நிதிக்காக தாமதம்?

கடந்த 2012ல் 4 இடங்களில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளதாக கூறி பலமுறை டெண்டர் விட்டும் ஒப்பந்த நிறுவனங்கள் முன்வரவில்லை. அதன்பிறகு மீண்டும் ஒவ்வொரு பாலப்பணிகளுக்கும் தலா ரூ15 கோடி முதல் 30 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த 2015ல் டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகளை தொடங்கியது. ஆனால், மேடவாக்கம், கோவிலம்பாக்கத்தில் 3 ஆண்டுகளாக பணிகளை மேற்கொண்டு வந்த ஆந்திர நிறுவனம் திடீரென ஓட்டம் பிடித்து விட்டது. தற்போது புதிய ஒப்பந்த நிறுவனத்திடம் அப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனமும் பணிகளை ஆமை வேகத்தில் செய்து வருகிறது. இதற்கு பாலப்பணிகளுக்கு கூடுதல் நிதியை பெறுவதற்காகவே அந்த நிறுவனம் தாமதம் செய்து வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

Tags : suburbs , Traffic congestion, suburban area, superior work
× RELATED ஜம்முவில் கடும் பனி போக்குவரத்து துண்டிப்பு