×

மக்களவை தேர்தலில் மகன் மட்டும் வெற்றி எதிரொலி ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ் திடீர் அஞ்சலி

சென்னை: ஜெயலலிதா சமாதிக்கு நேற்று ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதியில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 38 தொகுதியில் நடந்த தேர்தலில் 37 இடங்களில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தன. தேனி மக்களவை தொகுதியில் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதும், மகனுக்கு அமைச்சர் பதவிக்காக கடந்த 10 நாட்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2 முறை டெல்லி சென்று வந்துள்ளார். ஆனால், முதல்வர் எடப்பாடி, வைத்திலிங்கத்துக்கும் அமைச்சர் பதவி கொடுத்தால் மட்டுமே ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்ததால் தமிழகத்துக்கு அமைச்சர் பதவியே இல்லை என்று பாஜ மேலிடம் அறிவித்து விட்டது. இதனால், தற்போது அதிமுகவில் எடப்பாடி - ஓபிஎஸ் இடையே மறைமுக பனிப்போர் நடந்து வருகிறது.

தேர்தல் முடிந்து ரிசல்ட் வெளிவந்து 12 நாட்கள் ஆகியும், அதிமுக சார்பில் வெற்றிபெற்ற ரவீந்திரநாத் குமார் சென்னையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கோ அல்லது கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கோ சென்று மாலையும் அணிவிக்கவில்லை, மரியாதையும் செலுத்தவில்லை. இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனும் தேனி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்றவருமான ரவீந்திரநாத் குமாருடன் நேற்று காலை 9.40 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு திடீரென சென்றார். ஜெயலலிதா சமாதியில் இரண்டு பேரும் மலர்வளையம் வைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தி, அவரது சமாதியை 3 முறை சுற்றி வந்து வணங்கினர். பின்னர் சிறிது நேரம் ஜெயலலிதா சமாதி அருகே அமர்ந்து தியானம் செய்தனர்.

இதையடுத்து, அருகில் இருந்த எம்ஜிஆர் சமாதிக்கும் சென்று மலர்வளையம் வைத்து இரண்டு பேரும் அஞ்சலி செலுத்தினர். தேர்தல் முடிந்து இரண்டு வாரத்துக்கு பிறகு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத் குமாரும் நேற்று திடீரென ஜெயலலிதா சமாதிக்கு சென்றது அதிமுகவினரிடம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், கடந்த 2017ம் ஆண்டு இதேபோன்று முதல்வர் பதவி பறிக்கப்பட்டதால், ஜெயலலிதா சமாதி முன் அமர்ந்து ஓபிஎஸ் மவுனவிரதம் இருந்தார். பின்னர் தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளதாக கூறினார். அதேபோன்று, தற்போது முதல்வர் எடப்பாடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திடீரென ஓபிஎஸ் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தியது, பின்னர் தியானம் செய்தது அதிமுக தொண்டர்களிடம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : election ,Lok Sabha ,victory ,Opposition Jayalalithaa , Lok Sabha election, victory Jayalalithaa Samadhi, OBS, Anjali
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...