×

நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உடனடி உதவி: மாணவர்களிடம் ஹீரோ ஆன ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்

விஜயவாடா: புற்றுநோய் பாதித்த மாணவனுக்கு உடனடியாக உதவியதன் மூலம், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மாணவர்களிடம் ஹீரோவாக மாறி உள்ளார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், 175ல் 151 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றுள்ளார். இதேபோல் மக்களவை தொகுதிகளிலும் 22ஐ கைப்பற்றி உள்ளார். அவரது கொள்கைகள் மாணவர்கள் தரப்பில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டிணத்தில் உள்ள ஸ்வரூபானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்குச் சென்றார். அப்போது விமான நிலையத்துக்கு அருகே வரும்போது, சில கல்லூரி மாணவிகள் பதாகைகளுடன் முதல்வர் பார்வையில் படும்படி நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்த ஜெகன் மோகன், அருகில் அழைத்து விசாரித்தார்.

அப்போது, தங்களுடன் படிக்கும் ஏழை மாணவன் நீரஜ் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது சிகிச்சைக்கு ரூ.25 லட்சம் ஆகும்  என்று டாக்டர்கள் கூறியதால், பலரிடம் நிதி திரட்டி வருகிறோம் என்றும், அதற்கு முதல்வரும் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதைக்கேட்ட ஜெகன் மோகன், உடனடியாக மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். உடனடியாக மாணவரின் சிகிச்சை செலவை ஏற்று, ரூ.20 லட்சத்தை விடுவிக்க உத்தரவிட்டார். மாணவர்களின் கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெகன் மோகனுக்கு பாராட்டுகள் குவிவதுடன், மாணவர்களின் ஹீரோவாக மாறி உள்ளார்.

Tags : Jaganmohan ,Hero ,victim ,Andhra Pradesh , Immediate Assistant, Hero, Andhra Chief Minister, JeganMohan
× RELATED தனது தந்தையின் நினைவிடத்தில் இருந்து...