ரூ15 லட்சம் கோடி செலவில் பசுமை வழிச்சாலைகள் கட்டுமானம்: மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

புதுடெல்லி: ‘‘ரூ15 லட்சம் கோடி செலவில் 22 பசுமை வழிச்சாலைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது’’ என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக நிதின் கட்கரி பொறுப்பேற்ற பிறகு நேற்று முதன் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: 22 பசுமை சாலைகள் கட்டுமான பணிகள் உள்பட ரூ15 லட்சம் கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. முடங்கி கிடக்கும் திட்டப்பணிகளை அடுத்த 100 நாட்களில் செயல்படுத்துவேன். நேற்று திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தேன். அதில் 225 திட்டங்கள் போதுமான நிதியின்மையால் முடங்கி கிடப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அதை மீண்டும் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து அடுத்த 100 நாட்களில் செயல்படுத்துவேன். கடந்த 2014ம் ஆண்டில் முதல் முறையாக நாங்கள் பொறுப்பேற்றபோது சுமார் 403 பணிகள் செயல்படுத்தப்படாமல் முந்தைய ஆட்சியாளர்களால் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன. டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் வழித்தட கட்டுமானப்பணி அடுத்த 2 மாதங்களில் நிறைவடையும். அதேபோல் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் கட்டுமான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற நெடுஞ்சாலை பணிகள் திருப்தியளிக்கிறது. இதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. தினமும் 40 கிமீ நெடுஞ்சாலை பணிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது தினமும் 32 கிமீ அளவுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலை அமைச்சகத்தால் ரூ11 லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் இதில் ஒரு பைசா ஊழல் கூட நடைபெறவில்லை.

உத்தரகாண்டின் பிதோராகார் வழியே கைலாஷ் மானசரோவருக்கு பாதை அமைக்கும் பணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும். கேதார்நாத், பத்ரிநாத் கங்கோத்ரி யமுனோத்திரியை இணைக்கும் சார்தாம் திட்டமும் இந்த ஆண்டுக்குள் நிறைவடையும். காதி உற்பத்தி பொருட்கள் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்களை உலக அளவில் பிரபலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேன் உற்பத்தியை வளர்ச்சி அடைய செய்துள்ளது போன்று உலக அளவில் அதிக தேவையாக உள்ள முருங்கையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்துவோம். அதேபோல் கயிறு உற்பத்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ10,000 கோடியை இனி ரூ20,000 கோடியாக அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

>