×

இரண்டு நாளில் ரூ320 அதிகரிப்பு, தங்கம் விலை ரூ25,000ஐ தொடுகிறது: நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: ஆபரண தங்கம் சென்னையில் நேற்று ரூ24,928 க்கு விற்கப்பட்டது. சவரன் ரூ25,000ஐ நெருங்கியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அட்சய திருதியைக்கு மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை 300 ரூபாய் குறைந்தது. அட்சய திருதியை அன்று சவரன் ரூ24,176 க்கு விற்கப்பட்டது. பின்னர் ஒரு வாரம் கழித்து கடந்த மாதம் 14ம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ248 உயர்ந்து ரூ24,680 ஆக இருந்தது. பின்னர் ஒரு வாரத்தில் சவரன் ரூ272 குறைந்தது. இப்படி ஒரு வாரம் உயர்வதும் மறு வாரம் குறைவதும் என இருந்ததால் சவரன் ரூ24,300க்கு மேல் உயரவில்லை. தேர்தல் கருத்துக்கணிப்பு  மற்றும் முடிவுகளுக்கு ஏற்ப பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. இதனால் பலரும் பங்கு முதலீடுகளில் கவனம் செலுத்தியதால் தங்கம் விலையில் கடந்த மாத இறுதியில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் கடந்த 5 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

கடந்த மாதம் 31ம் தேதி தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ248 உயர்ந்து ரூ24,496 ஆக இருந்தது. அடுத்த நாள் ரூ136 அதிகரித்தது. கடந்த திங்கட்கிழமை மட்டும் சவரனுக்கு ரூ24 சரிந்தது. நேற்று முன்தினம் சவரன் ரூ168 உயர்ந்து கிராம் ரூ3,097க்கும் சவரன் ரூ24,776க்கும் விற்கப்பட்டது. நேற்று சவரன் ரூ152 உயர்ந்து கிராம் ரூ3,116, சவரன் ரூ24,928க்கு விற்கப்பட்டது. ஏறக்குறைய சவரன் ரூ25,000ஐ நெருங்கி விட்டது. அதாவது கடந்த 31ம் தேதியில் இருந்து நேற்று வரை மட்டும் சவரனுக்கு ரூ680 உயர்ந்துள்ளது. இந்த வாரம் திங்கட்கிழமை தவிர 2 நாட்களில் ரூ320 உயர்ந்துள்ளது.

சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: உலக பொருளாதாரம் பதற்றமான சூழ்நிலையில் உள்ளது. சீன பொருட்கள் மீது அமெரிக்கா அபரிமிதமாக சுங்கவரி விதித்து வருகிறது. இதுபோல் சீனாவும் பதிலடி கொடுக்கிறது. இந்த வர்த்தகப்போர் காரணமாக இந்த இரு நாடுகளிடையே பொருளாதார ரீதியாக சுமூக நிலை ஏற்படவில்லை. உலக பொருளாதார சந்தை மிகவும் பதற்றமாக காணப்படுகிறது. இதனால் உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு இன்னும் தொடர வாய்ப்பு உள்ளது என்றார்.

Tags : jewelers , Gold price, jewelry buyers, shock
× RELATED தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் 28.5...