×

மன்னார் வளைகுடா கடலில் கரை ஒதுங்கிய அரியவகை நட்சத்திர மீன்கள்

ராமேஸ்வரம்: பாம்பன் முந்தல்முனை கடற்கரை பகுதியில் மன்னார் வளைகுடா கடலில் அலைகளுடன் நேற்று ஏராளமான நட்சத்திர மீன்கள் கரையோரத்திற்கு வந்து சென்றதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தட்பவெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பாகவும், சீற்றத்துடனும் காணப்படுகிறது. இதனால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் பல ஆழ்கடல் பகுதியில் இருந்து கடல் நீர் மேலோட்டமான பகுதிக்கு வந்து செல்கின்றன. சில நாட்களாக பாம்பன் குந்துகால் கடல்பகுதியில் பகல் நேரத்திலேயே அதிகளவில் டால்பின் மீன்கள் நீந்தி குதிக்கும் காட்சியை அவ்வப்போது காணமுடிகிறது. இந்த நிலையில், பாம்பன் முந்தல்முனை கடலோர பகுதியில் நேற்று ஏராளமான நட்சத்திர மீன்கள் காணப்பட்டது. இவற்றில் சில அலைகளுடன் சேர்ந்து கடற்கரை பகுதிக்கும் வந்தன. இவற்றை சுற்றுலாப்பயணிகள் ஆர்வமாக ரசித்து, போட்டோ எடுத்துக் கொண்டனர். தடிமனான முட்களுடன் கூடிய சரியான ஐந்து சமச்சீர் ஆரக்கால்களுடன் ஐங்கோண வடிவத்தில் இருக்கும் நட்சத்திர மீன்களில் பல வகை உள்ளது. கடலில் காணப்படும் மெல்லுடலிகளே இதன் உணவாகும். சிறிய மீன்களையும் உணவாக இவை உட்கொள்ளும்.

கடல் சிப்பிகளுக்குள் இருக்கும் சதை போன்ற மெல்லுடலி உயிரிகளை வேட்டையாடும் நடசத்திர மீன்கள், தனது முட்கள் நிரம்பிய கால்களால் உறிஞ்சி குடித்து உயிர் வாழ்கிறது. இந்தியாவில லட்சத்தீவு கடல் பகுதியில் அதிகளவில் காணப்படும் நட்சத்திர மீன்கள், மன்னார் வளைகுடா கடலில்தான் அதிகளவில் வாழ்கிறது. இதனை உணவாக பயன்படுத்துவது இல்லையென்றாலும், கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கு பல வகையிலும் உதவியாக உள்ளது. கடல் நீரில் இருந்து எடுத்த சில நிமிடங்களில் உயிரிழக்கும் நட்சத்திர மீன்கள் பலவகை பல வண்ணங்களில் உள்ளது. மீன்பிடி வலையில் சிக்கினால் மீனவர்கள் நட்சத்திர மீன்களை வலையில் இருந்து எடுத்து மீண்டும் கடலில் விட்டு விடுவர். நேற்று முந்தல்முனை கடல் பகுதியில் கடல் அலைகளுடன் நீந்தி கரையோர பகுதிக்கு வந்த சிவப்பு நிற முட்கள் கொண்ட நட்சத்திர மீன்களை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பார்த்து ரசித்தனர்.

Tags : Gulf of Mannar , Mannar Gulf, rare species, asteroids
× RELATED தமிழகத்தில் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்!