மானூர் அரசு பள்ளியில் குடிநீருக்காக வரிசையில் காத்திருக்கும் மாணவர்கள்

மானூர் : மானூர் பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளியில் குடிநீருக்காக மாணவர்கள் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மானூர் பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்தும் விவசாயத்தையே நம்பி வாழ்வாதாரத்தை நடத்துகின்றன. இங்கு கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது வழக்கத்துக்கு மாறாக கோடை வெயிலும் கொளுத்தி வருவதால் கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள ஆழ்குழாய் கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரும் குடிப்பதற்கு தகுந்ததாக இல்லாமல் உள்ளது. இதனால் சில இடங்களில் ஆர்.ஓ. இயந்திரத்தில் சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகின்றனர். தாமிரபரணி குடிநீர், இப்பகுதி கிராமங்களுக்கு வாரம் இருமுறை கிடைத்து வந்த நிலையில், அதுவும் தற்போது போதுமனதாக கிடைப்பதில்லை. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையுள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மானூர் அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மானூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பழைய கட்டிடங்களில் தாமிரபரணி ஆற்றுநீர் இணைப்பு இருந்தபோதும் போதுமான அளவுக்கு குடிநீர் கிடைப்பதில்லை.

அதேபோல் மானூர் வடபகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பு முடியவுள்ள மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு வகுப்புகள் நடந்து வரும் நிலையில் அங்கு ஆழ்குழாய் கிணறு தண்ணீரே பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. அதிலும் தண்ணீர் குறைவாக கிடைப்பதால் சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஆர்.ஓ. இயந்திரம் மூலம் தண்ணீரை சுத்திகரித்து ரேஷன் முறையில் மாணவர்களுக்கு பாட்டிலில் வழங்கப்படுகிறது.

 சில நேரங்களில் தண்ணீரை பிடிப்பதற்காக மாணவர்கள் வரிசையில் காத்திருக்கும் அவலமும் நீடிக்கிறது. மாணவர்களுக்கு தேவையான குடிநீரை வழங்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தலைமை ஆசிரியர் அருமை ஸ்மைலின் கூறினார்.  மானூர் அரசு பள்ளி மட்டுமின்றி, இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.


Tags : Manoor Government School , Manur , government school, students, drinking water
× RELATED வரி ெசலுத்தா விட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு