×

அஸ்தம்பட்டி- ஏவிஆர் ரவுண்டானா வரையிலான ஈரடுக்கு மேம்பாலம் தயார்

* 7ம்தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்

சேலம் : சேலத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுதினம் (7ம் தேதி) திறந்து வைக்கிறார். சேலத்தில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே போல இருசக்கர வாகனங்களும் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக சேலத்தில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள், பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதில் 5ரோடு பகுதியை மட்டும், தினமும்  ஒன்றரை லட்சம் வாகனங்கள் கடந்து செல்கிறது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில்  கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ₹320 கோடி மதிப்பில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

இதில் அஸ்தம்பட்டி ராமகிருஷ்ணா ரோடு எல்ஆர்என் ஓட்டல் அருகிலிருந்து சாரதாகல்லூரி சாலை, 5ரோடு வழியாக ஏவிஆர் ரவுண்டானாவிற்கு செல்லும் வகையில் ஒரு பாலமும், குரங்குச்சாவடியில் இருந்து 5ரோடு, புதியபஸ்நிலையம், 4ரோடு வழியாக அண்ணாபூங்காவை வந்து சேரும் வகையில் மற்றொரு பாலமும்  அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் 5ரோட்டில் இருந்து புதிய பஸ்நிலையம் வரையிலான பகுதி ஈரடுக்கு பாலமாக அமைகிறது. இந்த பாலங்கள் அமைக்கும் பணி, கடந்த 2ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது, அஸ்தம்பட்டி எல்ஆர்என் ஓட்டல் பகுதியில் இருந்து ஏவிஆர் ரவுண்டானா வரை செல்லும் பாலத்தின் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 7ம்தேதி திறந்து வைக்கிறார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த பாலத்திற்காக 5 ரோட்டில் இருந்து எல்ஆர்என் ஓட்டல் வரை 70 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் பணிகள் முடிவடைந்து விட்டது. ஜங்சன் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், அஸ்தம்பட்டிக்கு செல்ல வேண்டுமானால் சென்னை சில்க்ஸ் பகுதியில் பாலத்தில் ஏறி, எல்ஆர்என் ஓட்டல் பகுதியில் இறங்கிக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் சாரதா கல்லூரிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. அதேபோல் அஸ்தம்பட்டியில் இருந்து புதிய பஸ்நிலையத்திற்கு செல்பவர்கள், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், பாலத்தில் இருந்து இறங்கி திரும்பிச் செல்லலாம். நாளைமறுதினம் (7ம் தேதி) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த புதிய பாலத்தை திறந்து வைக்கிறார்,’’ என்றனர். பாலத்தை திறந்து வைப்பதற்காக நாளை (6ம் தேதி) காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகிறார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப் படுகிறது. இதுதொடர்பாக அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று (5ம்தேதி) மாலை ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

Tags : salem, Bridge, edappadi palanisami,
× RELATED கஞ்சா விற்பனை வழக்கில் தலைமறைவாக இருந்த மென்பொறியாளர் கைது..!!