×

ஒரு குடம் தண்ணீர் ரூ.10 வறட்சியின் பிடியில் தவிக்கும் வன்னிக்கோனேந்தல் கிராமங்கள்

* 20 ஆண்டு கால போராட்டம் தீருமா?

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் கடும் வறட்சியின் பிடியில் வன்னிகோனேந்தலும், அதன் சுற்றுவட்டார கிராமங்களும் சிக்கி தவிக்கின்றன. ஒரு குடம் தண்ணீர் ரூ.10க்கு விற்கப்படும் சூழலில், கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் கேட்டு பொதுமக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் ஆயிரத்து 500 குடும்பங்கள் உள்ளன. ஊரில் 21 தெருக்கள் உள்ளன. சங்கரன்கோவில் தாலுகாவின் உச்சபட்ச வறட்சியை வன்னிகோனேந்தல் கிராமத்தில் எப்போதும் பார்க்கலாம்.

வன்னிகோனேந்தல் பஞ்சாயத்தில் கூவாச்சிப்பட்டி, வடக்கு புளியம்பட்டி, தெற்கு புளியம்பட்டி, மேசியாபுரம், அடைக்கலாபுரம், வன்னிகோனேந்தல் ஆகிய 6 கிராமங்கள் உள்ளன. இதில் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் மேசியாபுரம், அடைக்கலாபுரம், வன்னிகோனேந்தல் ஆகிய 3 கிராமங்களும் இடம் பெறவில்லை. இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக அங்கு தண்ணீர் பஞ்சம் சொல்லி மாளாது. நெல்லை மாவட்டத்தை வாட்டியெடுக்கும் குடிநீர் பஞ்சம் வன்னிகோனேந்தல் பகுதிகளை தற்போது புரட்டி போட்டுள்ளது. அங்கு ஒரு குடம் சாதாரண குடிநீர் ரூ.10க்கும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.15, கிணற்று நீர் ரூ.5க்கும், ஒரு பேரல் தண்ணீர் ரூ.50 முதல் 80 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. கொஞ்சம் படித்த குடும்பங்கள் அக்கிராமத்தில் தண்ணீருக்கு மட்டுமே மாதம் ரூ.6 ஆயிரம் செலவிடுவதாக பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.

வன்னிகோனேந்தலில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தபால் நிலையம், கால்நடை மருத்துவமனை, மின்சார வாரிய அலுவலகம், மத்திய அரசின் எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம் போன்ற அரசு சார்ந்த பல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் தாமிரபரணி குடிநீர் மட்டும் இதுவரை எட்டாக்கனியாக உள்ளது. குடிநீர் கேட்டு பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து லிட்டர் குடிநீர் ஊருக்கு தருகிறோம் என அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கைகள் இல்லை. இவ்வாண்டு மார்ச் மாதம் முதலே பொதுமக்களின் மனுக்களும், போராட்டங்களும் தொடர்கதையாகின.

கலெக்டர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக மனுக்கள் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக ஏன் மறுபடி மறுபடி வந்து மனு கொடுக்கிறீர்கள் என அதிகாரிகள் அப்பாவி மக்களை கடிந்து கொள்கின்றனர். கடந்த 29ம் தேதி பொதுமக்கள் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சூழலில் ஆதிதிராவிட நல அலுவலர் கீதா தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாளித்து அனுப்பி வைத்தனர். ஆனால் எவ்வித நிரந்தர தீர்வுக்கும் வழி காணவில்லை. பொதுமக்களின் போராட்டத்திற்கு பின்னர் அதிகாரிகள் வன்னிகோனேந்தல் பகுதிகளை ஆலங்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைத்தனர்.

ஆனால் அத்திட்டத்தில் குடிநீர் எப்போது வந்து சேரும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் தரப்படவில்லை.இதுகுறித்து வன்னிகோனேந்தலை சேர்ந்த ராமசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இவ்வாண்டு வறட்சி காரணமாக கலெக்டர் அலுவலகத்திற்கு படையெடுத்துள்ளனர். எங்கள் கிராம மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் கேட்டு போராடி வருகிறோம். இதுவரை சுமார் 30 மனுக்கள் அதிகாரிகளுக்கு அளித்திருப்போம். வன்னிக்கோனேந்தலில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களால் பணம் கொடுத்து குடிநீரை வாங்க முடியாது.

எங்கள் ஊரில் பஞ்சாயத்து மூலம் 28 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டன. அதில் 6 இடங்களில் மட்டுமே போர் வாட்டர் கிடைத்தது. கோடையில் அதிலும் தண்ணீர் கிடைப்பதில்லை. ஆலங்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் தருகிறோம் என எங்கள் ஊரில் ஒரு பம்பிங் ஸ்டேஷனை அமைத்தனர். ஆனால் அதுவும் தற்போது பயனற்று கிடக்கிறது.  தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வருவதே எங்கள் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாகும்.’’ என்றார்.

கல்லடைப்பு நோய் பாதிப்பு

வன்னிகோனேந்தல் பொதுமக்கள் குடிநீருக்காக 3 கி.மீ தூரத்தில் உள்ள தேவர்குளத்திற்கு டூவீலர்களில் சென்று குழாய்களில் வெளியாகும் கசிவு குடிநீரை பிடித்து வருகின்றனர். வெளியிடங்களுக்கு செல்ல முடியாத பொதுமக்கள் போர் வாட்டரையே குடிநீராக பயன்படுத்தும் அவலமும் உள்ளது.


இதன் காரணமாக இரு ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்டோர் சிறுநீரக கல்லடைப்பால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்னிகோனேந்தலை சேர்ந்த பிளஸ்2 மாணவி கல்யாணி முகிலா கல்லடைப்பு காரணமாக தேர்வு எழுத முடியாமல் போன சோகமும் அரங்கேறியது.Tags : villages ,Vannikkonteenth ,drought , Nellai,Vannikkonental Villages, Drinking water, 20Years
× RELATED உலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்