×

களக்காடு மலையில் தொடரும் வறட்சி வனவிலங்குகள் குடிநீர் அருந்த 20 இடத்தில் தொட்டி அமைப்பு

* வனத்துறையினர் நடவடிக்கை

களக்காடு : களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின் மழை பெய்யவில்லை. ஊருக்குள் லேசாக பெய்த கோடை மழையும் மலைப்பகுதியில் தலைகாட்டவில்லை. இதனால் மலைப்பகுதியில் உள்ள நீரோடைகள், அருவிகள் தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. தலையணையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இன்றி பாறைகளாக காட்சி அளிக்கிறது. கடந்தாண்டு கூட தலையணையில் தண்ணீர் வற்றாமல் ஓடியது. ஆனால் இந்தாண்டு அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் முடிந்த பிறகும் வனப்பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது.

கடும் வெயிலால் மரங்களும், செடி, கொடிகளும் காய்ந்து காணப்படுகிறது. களக்காடு நெட்டேரியங்கால் அருவி, கோடை காலத்தில் இதுவரை வற்றியதே இல்லை. ஆனால் இந்தாண்டு கடும் வறட்சியின் காரணமாக நெட்டேரியங்கால் அருவியிலும் தண்ணீர் இல்லை. வனப்பகுதியில் உள்ள புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் தங்களது குடிநீர் தேவைக்கு இங்குள்ள நீரோடைகளை நம்பியே உள்ளன. இந்நிலையில் நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டுள்ளதால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு எழும் அபாய நிலை நிலவியது.

குடிநீருக்காக வனவிலங்குகள் இடம்பெயரும் சூழலும் ஏற்பட்டது. இதையடுத்து வனப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்படி களக்காடு வனசரகர் புகழேந்தி மேற்பார்வையில் வனவிலங்குகள் அதிகம் வாழும் இடங்களை தேர்வு செய்து அங்கு வனவிலங்குகள் குடிநீர் அருந்த சிறப்பு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

 இந்த தொட்டிகளுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. சில இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட களக்காடு, திருக்குறுங்குடி வனச்சரகங்களில் அடர்ந்த வனப்பகுதியில் இதுவரை 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொட்டிகளில் தண்ணீர் வற்றுகிறதா என்பதை கண்டறிய வனத்துறை ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் கூடுதல் தொட்டிகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவு வனத்துறையினர் தெரிவித்தனர்.


Tags : Drought Forests ,Thalassery , Kalakad , forest area, Forest Department,Water Tanks,Wild Animals
× RELATED காமநாயக்கன்பட்டி பரலோகமாதா ஆலய ரத வீதிகளில் தார்சாலை