×

தமிழகம் முழுவதும் ரூ.8 கோடி செலவில் 8 நகரங்களில் சிறப்பு நூலகங்கள்

* நெல்லையில் பிரமாண்டமாக தயாராகிறது தமிழ் மருத்துவ நூலகம்

நெல்லை : தமிழகத்தில் ரூ.8 கோடி செலவில் 8 நகரங்களில் சிறப்பு நூலகங்கள் தயாராகி வருகின்றன. நெல்லையில் தமிழ் மருத்துவம் சார்ந்த பிரமாண்டமான நூலகம் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொதுநூலகத்துறை பொதுமக்களின் நூல் வாசிப்பு திறனை ஊக்குவித்து வருகிறது. தமிழக நூலகங்களில் கணினி மயமாக்கல், பார்வையற்றோருக்கு பிரெய்லி முறை வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

alignment=


பொது நூலகத்துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வகையில் அரசு பல்வேறு நகரங்களில் சிறப்பு நூலகங்களை காட்சி படங்களோடு செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.  அதன்படி தமிழகத்தில் 8 இடங்களில் தலா ஒரு கோடி செலவில் 8 சிறப்பு நூலகங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டது. சிவகங்கை அருகே கீழடியில் பழம்பெரும் தமிழர் நாகரிகம் வெளிப்படுத்தும் சிறப்பு நூலகமும், தஞ்சாவூர் நகரில் தமிழிசை, நடனம், நுண்கலை சார்ந்த நூலகமும், மதுரையில் நாட்டுபுறக்கலைகள் சார்ந்த நூலகமும், நெல்லையில் தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகமும், நீலகிரியில் பழங்குடியின பண்பாடு சார்ந்த நூலகமும், திருச்சியில் கணிதம், அறிவியல் சார்ந்த நூலகமும், கோவையில் வானியல், புதுமை கண்டுபிடிப்புகள் தொடர்பாக நூலகமும், சென்னையில் அச்சுக்கலை தொடர்பான நூலகமும் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

alignment=


நெல்லையில் அமைக்கப்பட்டு வரும் தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகம் தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. பாளை மாவட்ட மைய நூலகத்தின் முதல் தளத்தில் 1200 சதுர அடியில் தமிழ் மருத்துவம் சார்ந்த சிறப்பு நூலக காட்சி கூடம் தற்போது காண்போர் கண்களை கவரும் வகையில் உள்ளது. தமிழ் மருத்துவ சிறப்பு நூலகத்திற்கு நுழைவாயிலில் அகத்தியர், திருமூலர், போகர் கற்சிலைகள் பார்வையாளர்களை வரவேற்கின்றன.முதல்தளத்தின் அரங்கை சுற்றிலும் 90 மூலிகை தொட்டிகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அரங்கின் வலப்பக்கத்தில் யோகா பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏகபாத ஆசனம், திரிேகாணாசனம், உட் கட்டாசனம், மகா ருத்ராசனம், தடாசனம், சுகாசனம், தனுராசனம் என யோகாவின் அனைத்து வகைகளும் படங்கள் மூலம் விளக்கப்பட்டு அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மருத்துவ சிறப்பு நூலக அரங்கில் சித்த மருத்துவம் சார்ந்த நூல்கள் 3 ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதை சுற்றிலும் அலமாரிகளில் பாட்டில்களில் சித்த மருந்துகள் ஒவ்வொன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. நீரடிமுத்ர, பால்மிதப்பான் கிழங்கு, வலம்புரிக்காய், காட்டு புகையிலை, சிற்றாமுட்டி, செங்கழுநீர், நாட்டு இரவேல் சின்னி உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் பாட்டில்களில் இடம் பெற்றுள்ளன. மற்றொரு பக்கத்தில் இசப்பக்கோல் விதை, எட்டி விதை, அல்லி விதை, மதனப்பூ விதை, ஜாதிக்காய், நல்மிளகு, ஆமணக்கு விதை என சித்த மருத்துவம் சார்ந்த விதைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதுபோக அந்த அரங்கில் நீராவி குளியல் இயந்திரம், இடிஉரல், கல் கல்வம், செந்தூரம் எரிக்கும் கருவி, மெழுகுதலைக்கருவி என நம் முன்னோர் பயன்படுத்திய பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அரங்கின் மைய பகுதியில் சித்த மருத்துவ அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில் காணொலி காட்சி மூலம் கருத்தரங்கு நடத்தவும், எல்இடி மூலம் சித்த மருத்துவர்களின் உரையும் இடம் பெற உள்ளது.

நூலகங்கள் ஏதோ கதை புத்தகங்கள் படிக்கவும், நடப்பு செய்திகளை அறிவதற்கான இடம் என்பதையும் தாண்டி தற்போது மாவட்ட மைய நூலகம் பண்பாட்டு மீட்பு தளமாக மாறுவது வாசகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ் மருத்துவ நூலகத்தை நாளை (6ம் தேதி) சென்னை அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர், விரைவில் திறக்கப்படும் என தெரிகிறது.


பாரம்பரியம் மீட்டெடுக்கப்படும்

இதுகுறித்து வாசகர் வட்ட துணை தலைவர் கணபதி சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘சித்த மருத்துவம் நம் தாய் மருத்துவம். பாட்டி வைத்தியத்தில் உள்ள பல்வேறு தகவல்கள் அதை சார்ந்தது. மருந்தே உணவு, உணவே மருந்து என்ற கலாசாரத்தை நாம் மீண்டும் பெற்றிட இத்தகைய தமிழ் மருத்துவ நூலகங்கள் நமக்கு அவசியம் தேவை. சித்தர்கள் வாழும் மலையான அகத்திய மலையின் அருகில் நமக்கு சித்த மருத்துவ நூல்கள், சித்த மருந்துகள், செடிகள் மாவட்ட மைய நூலகத்தில் அறிமுகம் செய்யப்படுவது நமக்கு கிடைத்த வரம். வாழ்க்கை நெறிமுறைகளை உயர்த்தும் நம் பாரம்பரியத்தை இதன் மூலம் மீட்டெடுக்கலாம்’’ என்றார்.

Tags : libraries ,cities ,Tamil Nadu , Special Libraries, Tamil nadu,library, Tirunelveli,trichy
× RELATED பொது நூலகத்துறையில் நூல் கொள்முதல் செய்ய இணைய தளம் தொடக்கம்