×

திருப்பத்தூர் அருகே இன்ஜினில் கோளாறு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தம்

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் அருகே  இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில்  புறப்பட்டது. நேற்று அதிகாலை 3.50 மணியளவில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி-காக்கங்கரை ரயில் நிலையம் இடையே வந்தபோது திடீரென இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் உடனடியாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இன்ஜினில் ஏற்பட்டிருந்த பழுதை ஆய்வு செய்தனர். பின்னர், மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு பெட்டிகளுடன் இணைத்தனர். இதன் காரணமாக 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு அதிகாலை 5.50 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது.

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நின்றதால் அவ்வழியாக ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ், கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு செல்லும் பாசஞ்சர் ரயில், கொல்கத்தாவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 2 மணி நேரத்திற்கு பிறகு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டதும் மற்ற 5 ரயில்களும் காலதாமதமாக இயக்கப்பட்டது.

Tags : Disruption ,Yeradu ,Tirupattur , Tirupattur, Yercaud express train, stop
× RELATED பொய்கை மாட்டுச்சந்தையில் ₹90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை