ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிட வலியுறுத்தி தஞ்சையில் போலீஸ் தடையை மீறி அனைத்துகட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை: காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சை தலைமை அஞ்சலகம் முன் அனைத்து கட்சியினர் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தஞ்சை மக்களவை தொகுதி எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை கைவிட வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் பாரதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் துரைமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நீலமேகம், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங், தமிழர் தேசிய முன்னணி பொது செயலாளர் அயனாபுரம் முருகேசன், மதிமுக மாவட்ட செயலாளர் உதயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி மற்றும் பேரழிப்புக்கு எதிரான பேரியக்க நிர்வாகிகள், பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்றனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. போலீஸ் தடையை மீறி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 250 பேர் மீது தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : parties , Hydro carbon project, Tanjore, police ban, demonstration
× RELATED வாழ்வுரிமை கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை