×

ஓசூர் அருகே ஏட்டுவை கத்தியால் குத்திவிட்டு ஓடிய பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார் இன்ஸ்பெக்டர்

ஓசூர்: ஓசூர் அருகே போலீஸ் ஏட்டுவை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடியை, இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு எடியூர் பகுதியைச் சேர்ந்தவன் சஷாங்க்(23). பிரபல ரவுடியான இவன் மீது பெங்களூரு ராஜாஜி நகர், கோனனகுண்டே பகுதி போலீஸ் ஸ்டேசன்களில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் சஷாங்க், ஓசூர் அருகே அத்திப்பள்ளி அருகில் பல்லூர்கேட் பகுதியில், பைக்கில் சுற்றுவதாக அத்திப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அத்திப்பள்ளி இன்ஸ்பெக்டர் பாலாஜி, ஏட்டு பிரகாஷ் ஆகியோர் சென்று அவனை பிடிக்க முயன்றனர்.

அப்போது, கொள்ளையன் சஷாங்க் தான் வைத்திருந்த கத்தியால் ஏட்டு பிரகாஷை குத்தினான். இதில், பலத்த காயமடைந்த அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். அதை பார்த்த இன்ஸ்பெக்டர் பாலாஜி, தான் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி 2 முறை சுட்டு, ரவுடி சஷாங்க்கை சரணடையுமாறு எச்சரித்தார். ஆனால், சரணடையாமல் இன்ஸ்பெக்டர் பாலாஜியை ரவுடி சஷாங்க் தாக்க முயன்றான். அப்போது, அவர் துப்பாக்கியால் அவனது காலில் சுட்டார். இதில் தடுமாறி விழுந்த அவனை போலீசார்  சுற்றிவளைத்து பிடித்தனர். இதனையடுத்து, அவனை மீட்டு அத்திப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், ரவுடி சஷாங்க் கத்தியால் குத்தியதில் காயமடைந்த ஏட்டு பிரகாசும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த பெங்களூரு எஸ்பி ராம்நிவாஸ் சபட், ஏடிஎஸ்பி சுகித் ஆகியோர் அத்திப்பள்ளிக்கு நேற்று காலை வந்தனர். அவர்கள் ரவுடி சஷாங்க் சுடப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். மேலும், சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் விவரங்களை கேட்டறிந்தனர். இதுகுறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ரவுடியை இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Inspector ,Rowdy ,Hosur , Hosur, famous rowdy, gun, inspector
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு