×

இஸ்லாமிய சமுதாயத்தின் பாதுகாப்பு கவசமாக திமுக செயல்படும்

சென்னை: இஸ்லாமிய சமுதாயத்தின் பாதுகாப்பு கவசமாக திமுக செயலாற்றிடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து வகையிலும் தங்களை வருத்திக் கொண்டு நோன்பிருந்து அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் மனமார்ந்த ரமலான் திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக எப்போதும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக அயராது பாடுபடும் இயக்கம் மட்டுமல்ல,  அந்த ஆழமான உறவின் அடிப்படையில் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியதும் திமுக அரசுதான்.

அந்த உறவின் வெளிப்பாடு தேர்தல் காலங்களில் மட்டுமின்றி என்றைக்கும் திமுகவிற்கும், இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் உண்டு என்பதில்  இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை என்பது எனக்கு தெரியும். இஸ்லாமிய மக்களுக்கும் தெரியும். அந்த உறவின் தொடர்ச்சியாக இன்றைக்கு இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எத்தகைய சோதனைகள் வந்தாலும்,  எதிர்க்குரல் கொடுக்கும் இயக்கமாக என் தலைமையில் திமுக செயல்பட்டு வருகிறது. சிறுபான்மையின மக்களின் சமூக- பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், அவர்களுக்கு எங்கிருந்து, எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதைத் தடுத்து நிற்கும் இஸ்லாமிய சமுதாயத்தினரின் பாதுகாப்புக் கவசமாக திமுக தொடர்ந்து செயலாற்றிடும் என்று உறுதியளித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : DMK ,arm , The protection of Islamic society, DMK,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி