×

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் தயாரிப்பு பணி 10ம் தேதி தொடங்குகிறது

புதுடெல்லி: இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் மத்திய பட்ஜெட்டுக்கான பணிகள் வரும் 10ம் தேதி தொடங்க இருக்கின்றன. மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக மோடி பதவி ஏற்றுள்ளார். இதைத்தொடர்ந்து, 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் 17ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கு முந்தைய தினம், நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்பிக்கப்படும்.

மக்களவை தேர்தலுக்கு முன்பாக, கடந்த பிப்ரவரி 1ம் தேதி பாஜ தலைமையிலான அரசு குறிப்பிட்ட காலத்திற்கான இடைக்கால பட்ஜெட்டை வெளியிட்டது. தற்போது, தனது 2வது பதவிக்காலத்தின் முழுமையான முதல் பட்ஜெட்டை அது தாக்கல் செய்ய உள்ளது. கடந்த 5 ஆண்டில் உள்நாட்டு பொருளாதாரம் மந்தகதியில் இருந்த நிலையில் புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், பல்வேறு சவால்களுடன் பட்ஜெட்டை தயாரிக்க உள்ளார். இதற்கான பணிகள் வரும் 10ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக நிதி அமைச்சக தகவல்கள் வெளியாகி உள்ளன. பட்ஜெட் பணிகள் தொடங்கியதில் இருந்து, பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்பட்டு முடியும் வரை, டெல்லியில் உள்ள மத்திய தலைமை செயலகத்தின் நார்த் பிளாக்கில் உள்ள நிதி அமைச்சக அலுவலகம் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும். அமைச்சகத்தின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வாயிலில் பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள். மேலும், டெல்லி போலீஸ் உதவியுடன் உளவுத்துறையினரும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பார்கள்.  இந்த காலகட்டத்தில் பார்வையாளர்களோ, மீடியாக்களோ அமைச்சக வளாகத்தில் நுழைய தடை விதிக்கப்படும். இதனால், அடுத்த வாரம் முதல் நிதி அமைச்சகம் பரபரப்பான சூழலில் காணப்படும்.

Tags : Nirmala Sitaraman , Finance Minister, Nirmala Sitaraaman, Budget Product Work
× RELATED வாட்ஸ் அப் வரலாற்றில் படித்ததை...