×

சென்னை மாவட்டத்தில் அதிரடி சோதனை பதிவு பெறாமல் செயல்பட்ட 227 விடுதிகளுக்கு நோட்டீஸ்

சென்னை: சென்னை மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்பட்டு வந்த 227 விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாவட்டத்தில் செயல்படும் பெண்கள் விடுதிகள் அனைத்தும் பதிவு பெறுவதற்கான  விண்ணப்பங்களை சமர்பிக்க  வேண்டும் என்று சென்னை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 1050 விடுதிகள் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தன. இவற்றில் 7 விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 127 விடுதிகளுகளிடம்  கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில் 7 விடுதிகள் அனுமதியின்றி செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 5 விடுதிகள் மூடப்பட்டுள்ளன. மீதம் உள்ள 2 விடுதிகள் விரைவில் மூடப்படவுள்ளது.  

இந்நிலையில் சென்னையில் செயல்படும் பதிவு பெறதா விடுதிகளை கண்டறிய சென்னை மாவட்ட நிர்வாகம் நகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில் பதிவு பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்காமல் 227 விடுதிகள் செயல்பட்டுவருவது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி மயிலாப்பூர் வட்டத்தில் 18, வேளச்சேரி வட்டத்தில் 20, சோழிங்கநல்லூர் வட்டத்தில் 79, அயனாவரம் வட்டத்தில் 3, ஆலந்தூர் வட்டத்தில் 16, பெரம்பூர் வட்டத்தில் 5, மதுரவாயல் வட்டத்தில் 17, கிண்டி வட்டத்தில் 23, தண்டையார் பேட்டை வட்டத்தில் 6, மாம்பலம் வட்டத்தில் 15, அமைந்தகரை வட்டத்தில் 9, புரசைவாக்கம் வட்டத்தில் 9, எழும்பூர் வட்டத்தில் 3 என மொத்தம் 227 விடுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடுதிகள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனுமதி பெறாமல் செயல்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்த விடுதிகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. துணை ஆட்சியர்  தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு இவர்களிடம் நேரில் விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த விடுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரம் மற்றும் மின் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags : hostels ,district ,Chennai , Chennai, accommodation, notices
× RELATED தமிழ்நாட்டில் மேலும் 10 பெண்கள் விடுதிகள் தோழி விடுதியாக தரம் உயர்கிறது