×

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்

* சிகிச்சை அளித்த நர்ஸ், நண்பருக்கும் அறிகுறி


* மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைப்பு

திருவனந்தபுரம்: கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 315 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க, தனி வார்டுகள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கடந்தாண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. நர்ஸ் லினி உள்பட 17 பேர் இறந்தனர். பின்னர், இது காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர் காய்ச்சல் காரணமாக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த பரிசோதனையில் நிபா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதற்காக, ஆலப்புழாவில் உள்ள நுண்ணுயிரி பரிசோதனை கூடத்தில் நடந்த சோதனையிலும் நிபா வைரஸ் அறிகுறிகள் தெரிந்தது. இதனால், அந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் பரிசோதனைக்காக அவரின் ரத்த மாதிரி பூனா தேசிய ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை நேற்று வந்தது. அதில், மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனே, சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கொச்சி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கொச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வாலிபருக்கு சிகிச்சை அளிக்க, தனியார் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மற்ற நோயாளிகள் அச்சப்பட தேவையில்லை. இவருடன் நெருங்கி பழகியவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நிபா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. எர்ணாகுளம் ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்படும். நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளன. அந்த மருந்துகள் இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மாணவருக்கு சிகிச்சை அளித்த 2 நர்சுகள் அவருடன் தங்கி இருந்த நண்பர் உள்பட 4 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவருடன் நெருங்கி பழகிய 315 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவரது நண்பர் கொச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், நிபா பாதிக்கப்பட்ட மாணவர் தங்கியிருந்த திருச்சூரில் உள்ள அவரது வீட்டிற்கு 5 கி.மீ. சுற்றளவில் சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பாதுகாப்பு துறை ஆய்வு நடத்தினர். இப்பகுதியில் உள்ள 10 பெண்கள் உள்பட 27 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பள்ளிகள் திறப்புதள்ளிவைப்பா?:

கேரள அமைச்சர் மொய்தீன் கூறுகையில், ‘‘நிபா காய்ச்சல் காரணமாக மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும்,’’ என்றார். மத்திய குழு விரைவு நிபா வைரஸ் பரவியுள்ள கேரளாவுக்கு ஆலோசனைகள் வழங்கவும், சிகிச்சைக்கு உதவிகள் செய்யவும் 6 நிபுணர்கள் கொண்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று உடனடியாக அனுப்பினார். மேலும், நிபா பரவல் பற்றி உதவிகள் செய்வதற்காக சிறப்பு கட்டுபாட்டு அறையும் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பீதி பரப்புவோர் மீது நடவடிக்கை

கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் கூறியுள்ளது: கடந்த வருடம் கோழிக்கோட்டில் நிபா காய்ச்சலை கட்டுப்படுத்தியது போல இம்முறையும் இந்நோயை பரவவிடாமல் கட்டுப்படுத்த முடியும். சுகாதாரத்துறை அதிகாரிகள் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சுகாதாரத்துறை வழங்கும் அறிவுரைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். சமூக இணைய தளங்கள் மூலம் நிபா காய்ச்சல் குறித்து பீதி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Nifa ,Kerala , Kerala, Nipa virus
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...