×

இன்று முதல் வர்த்தக சலுகை பறிப்பு அமெரிக்காவுக்கு பதிலடி தர தயக்கம்

புதுடெல்லி: இந்தியாவுக்கு பல ஆண்டுகளாக அளித்து வந்த வர்த்தக சலுகையை அமெரிக்கா பறித்து விட்டது. இன்று அமலுக்கு வரும் இந்த நடவடிக்கை குறித்து இந்தியா எந்த பதிலடி முடிவையும் எடுக்கவில்லை. கடந்த 1975ம் ஆண்டு, ஏழை நாடுகளுக்கு, அதன் வளர்ச்சிகுகு  உதவ வர்த்தக சலுகைகள் அளிப்பது என அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகள் உறுப்பினராக உள்ள உலக வர்த்தக அமைப்பில்  முடிவு எடுக்கப்பட்டது. அப்போது முதல் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள், இந்தியா உட்பட வளரும் நாடுகளுக்கு வர்த்தக சலுகை அளிக்கின்றன.  இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தக சலுகையை வரும் 5ம் தேதியோடு ரத்து செய்வதாக அறிவித்தார்.  இது இன்று அமலுக்கு வருகிறது. ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் இச்சலுகை அடுத்தாண்டு டிசம்பரில் தான் முடிகிறது. ஆனால் ஒன்றரை ஆண்டுக்கு முன்பே ரத்து செய்துள்ளது.  இது இந்தியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. வெளியுறவு அமைச்சர் உட்பட யாரும் வாய் திறக்கவில்லை.

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் தான் அமெரிக்கா அதிகமாக வர்த்தகம் செய்கிறது.அமெரிக்காவின் அமேசான், வால்மார்ட், கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியாவில் தன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி தயக்கம் காட்டுவதாகவும் ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

120 நாடுகளுக்கு சலுகை

மொத்தம் 120 ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு அமெரிக்கா உட்பட சில பணக்கார நாடுகள் வர்த்தக சலுகைகள் அளித்து வருகின்றன. கடந்த 1975ல் உ,லக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள் முடிவின் படி வர்த்தக சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

சலுகை தேவையில்லை

அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு இந்தியா  ஏற்றுமதி செய்கிறது. 600 கோடி டாலருக்கு மட்டும் வரி இல்லை.  அதுபோல, அமெரிக்காவில் இருந்து 2600 கோடி டாலர்  அளவுக்கு இந்தியா இறக்குமதி செயகிறது. இதில் வெறும் 19 கோடி டாலர் அளவுக்கு தான் வரியில்லை. இப்படி சொற்பமாக வரி சலுகை  கிடைப்பதால் அதை இழப்பதில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

Tags : US , Trade offer, USA
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...