×

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: திருவண்ணாமலை கலெக்டர் ஆபீஸ் முன் கோஷம்

திருவண்ணாமலை: சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான அரசு ஆணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை நீக்கக்கோரி, மத்திய நீர்வழி மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது.

இது தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க முடியாது என நேற்று முன்தினம் உத்தரவிட்டது. ஆனாலும், மத்திய- மாநில அரசுகள் எந்த வகையிலாவது இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கும் என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் மிக உறுதியாக உத்தரவிட்ட பிறகும், இத்திட்டத்தை எந்த விதத்திலாவது நிறைவேற்றலாம் என மத்திய அரசு துடிக்கிறது. பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

இது குறித்து, போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், சென்னை- சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை இனியாவது மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றனர். பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே காளிபேட்டையில், சேலம்- சென்னை 8 வழி சாலை எதிர்ப்பு குழுவினர், எடப்பாடி அரசும், மோடி அரசும் 8 வழி சாலைக்கு மேல் முறையீடு செய்ததை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து பேசுகையில், நாடு முழுவதும் குடிநீர் பஞ்சத்தில் தள்ளாடும் நிலைமையை சரிசெய்ய முடியாத அரசு, விவசாய நிலங்களை அழித்து அதில் சாலை போடும் பணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே இருக்கும் சாலைகளை சரிசெய்ய இயலாமல் இருக்கும் அரசு, விவசாயிகளின் வயிற்றில் அடித்து, அதில் 8வழி சாலை போடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது என்றார்.

Tags : governments ,Chennai ,Thiruvannamalai Collector , Chennai-Salem, 8 Planning Scheme, Central, State Governments, Farmers, Demonstration
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...