×

இந்தியாவிலேயே முதன்முறையாக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்: கருத்து கேட்கிறது மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்படுகிறது. இவற்றில் எரிபொருளாக ‘யுரேனியம்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்பட்ட பிறகு, ‘புளூட்டோனியம்’ என்ற அணு கழிவாக மாறுகிறது. அந்தக் கழிவு, அணு உலைக்கு கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது. இந்த அணுக் கழிவுகளை எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே சேமிக்க முடியும். இந்நிலையில் கூடங்குளம் அணுஉலை தொடர்பாக அமைப்பு ஒன்றின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ல் வழக்கு தொடுக்கப்பட்டது.

அதில் 2013ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 15 நிபந்தனைகளைக் கூறி அணு உலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான அணுக் கழிவு மையத்தை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதாகும்.

ஐந்து ஆண்டு கால அவகாசம் 2018 மார்ச் மாதமே முடிந்து விட்டது. இதையடுத்து மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென்று உச்ச  நீதிமன்றத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதம் இந்திய அணுமின் சக்தி கழகம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்  2022 வரை கால அவகாசம் அளித்திருந்தது.

இதையடுத்து அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மண்டலம் அனுமதிகோரி கடந்த 2016ல் விண்ணப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்காக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூலை 10ம் தேதி ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் நடைபெறும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


Tags : center ,Koodankulam , In India, Koodankulam, Nucleus, Center
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்