×

மதுரை கலெக்டர் இடமாற்றத்துக்கு பின்னணி என்ன? ஆளுங்கட்சியினர் சிபாரிசை ஏற்க மறுத்து தகுதியான 1,573 பேருக்கு பணி உத்தரவு: நள்ளிரவில் வழங்கியதால் அமைச்சர்கள் அதிர்ச்சி

மதுரை: அமைச்சர், எம்எல்ஏக்கள் சிபாரிசை ஏற்க மறுத்து, அங்கன்வாடி பணியிடங்களுக்கு, தகுதியான 1,573 பேருக்கு பணி நியமன உத்தரவை நேற்று முன்தினம் நள்ளிரவில் வழங்கியதால் மதுரை கலெக்டர் நாகராஜன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடந்த ஏப். 20ல் பெண் தாசில்தார் அத்துமீறி நுழைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மதுரை கலெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும், புதிய கலெக்டரை நியமித்து வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து தாசில்தார் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அப்போது மதுரை கலெக்டர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டார். சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் நாகராஜன், மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் ஏப். 28ம் தேதி பொறுப்பேற்றார். மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் கலெக்டராக தொடர்ந்து பணியில் இருந்தார்.

இந்நிலையில், காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக, சத்துணவு, அங்கன்வாடி உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து அத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில், அங்கன்வாடிகளில் அமைப்பாளர், உதவியாளர் என 1,600 பணியிடம் காலியாக இருப்பதாக தெரிந்தது. இதற்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர்.

இந்தப் பணிகளுக்கு 2017 செப். 16ம் தேதி முதல் ஒருவாரம் நேர்காணல் நடந்ததாகவும், அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சிபாரிசு செய்திருந்ததால், யாருக்கு பணி ஒதுக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டு, பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
அனைத்து ஆவணங்களையும் கேட்டு பெற்ற கலெக்டர், கோப்புகளை ஆய்வு செய்தார்.

அதிமுகவினர் சிபாரிசு கடிதத்தை ஒதுக்கி வைத்தார். இந்த பதவிக்கு தகுதியான கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், வயது முதியவர்கள், கலப்பு திருமணம் செய்தவர்கள் என தரம்பிரித்தார். அவர் முன்னிலையில், நேர்காணலில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியான 1,573 பேர்களை தேர்வு செய்தார். அவர்களுக்கு பணிநியமன உத்தரவை தயாரித்தார்.

நேற்று முன்தினம் இரவோடு இரவாக பணிக்கான உத்தரவுகளை உரிய நபர்களிடம் வழங்க தாசில்தார், மாநகராட்சி, ஊராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நியமன உத்தரவுகளை பெற்றுக்கொண்ட அரசு ஊழியர்கள் நள்ளிரவில் வீட்டு கதவை தட்டி பணி நியமன உத்தரவை உரியவர்களிடம் வழங்கி, பணியில் சேர்ந்ததற்கான அத்தாட்சி கடிதத்தை பெற்று நேற்று மதியம் சமர்ப்பித்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட 1,573 பேரும் நேற்று பணியில் சேர்ந்தனர். இதனை அறிந்த அதிமுக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கலெக்டரை நேற்று காலையில் இருந்து தொடர்பு கொள்ள முயன்றனர். அவர் யாருடைய போனையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலெக்டரை மாற்ற வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத்தொடர்ந்து, நேற்று மதியம் அதிரடியாக மதுரை கலெக்டர் மாற்றம் செய்யப்பட்டார். அவர் தொழில் மேம்பாட்டு கழக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை டிஆர்ஓ சாந்தகுமார் (பொ) கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல்களை கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Governors ,personnel ,Cabinet , Madurai Collector, Transfer, What is the background? Ministers are shocked
× RELATED முதல் ஐ.பி.எல் போட்டி: சேப்பாக்கம்...