×

2ம் உலகப் போரில் கொல்லப்பட்ட இந்திய சிப்பாய்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு: 75 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிசயம்

ஹிசார்: இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி படையினரை எதிர்த்து போட்டியிட்டு உயிர் நீத்த பிரிட்டிஷ் இந்திய ராணுவ சிப்பாய்கள் 2 பேரின் எஞ்சிய உடல் பாகங்கள், 75 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களின் உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது.
இரண்டாவது உலகப் போர் கடந்த 1939 முதல் 1945 வரை, 6 ஆண்டுகள் நடந்தது. இதில், ஜெர்மனி படைகளுக்கு எதிராக பிரிட்டிஷ் இந்திய ராணுவ சிப்பாய்களும் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் 4வது  பட்டாலியனில் 13வது எல்லைப் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இத்தாலியில் உள்ள போகியோ அல்டோ என்னுமிடத்தில் போர் புரிந்தனர். இதில், உயிரிழந்த இரண்டு இந்திய சிப்பாய்களின் எஞ்சிய உடல் பாகங்கள், சமீபத்தில் இந்தியா  கொண்டு வரப்பட்டது.
இது குறித்து ஓய்வு பெற்ற கேப்டன் பிரதீப் பாலி கூறுகையில், ``4வது பட்டாலியனைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய பாலு ராம், 18 வயதுடைய ஹரி சிங் இத்தாலிக்கு அனுப்பப்பட்டனர். அங்கு நடந்த போரில் அவர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம்  செய்தனர். 75 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களின் எஞ்சிய உடல் பாகங்கள் இந்தியா கொண்டு வரப்பட்டு, கடந்த திங்கட்கிழமை அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் அவர்களின் உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது,’’ என்றார்.
இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களை அடையாளம் காணும் முயற்சி இத்தாலியில் கடந்த 2010ம் ஆண்டு வரை நடந்தது.
 கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில் பாலு ராமும், ஹரி சிங்கும் ஐரோப்பியர்கள் அல்ல என்பது உறுதிபடுத்தப்பட்டது. பின்னர், 4வது பட்டாலியனை சேர்ந்த இந்திய ராணுவ சிப்பாய்கள் என்பது கண்டறியப்பட்டது.

‘ஏழாம் அறிவு’ பாணியில்...
இத்தாலியில் நடத்தப்பட்ட மரபணு சோதனையில் லாலு ராமும், ஹரி சிங்கும் ஐரோப்பியர்கள் அல்ல; இந்திய வீரர்கள் என உறுதி செய்யப்பட்டதும்  அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கின.  இந்திய ராணுவத்தின் உதவியுடன் பாலு ராம், ஹரி  சிங்கின் குடும்பத்தினர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, ‘ஏழாம் அறிவு’ படத்தில் வருவது போல் அவர்களுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது.  அதில், அவர்களின் மரபணுவும், பாலு ராம் மற்றும் ஹரி சிங்கின் மரபணுவும் ஒத்துப்போயின.  இதையடுத்து, 2 சிப்பாய்களின் எஞ்சிய உடல் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.



Tags : cadets ,Indian ,Second World War , Killed , World War II,Indian soldiers
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...