×

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு திடீர் கலைப்பு: உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற சிறப்பு டிவிஷன் பெஞ்ச் கலைக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க கோரி, வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே போன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள, உற்சவர் சிலை மற்றும் மூலவர் சிலைகள் சேதம் அடைந்துள்ளது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட கோரி, ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் அதிகம் இருந்ததால், இந்த வழக்குகளை விசாரிக்க, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்சை அமைத்து அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, சிலை கடத்தல் தொடர்பாக தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவ், சினிமா இயக்குநர் வி.சேகர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் சிலரும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, சிலை கடத்தல் தொடர்பான புகார்கள், வழக்குகள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தெரிவித்தது. இதைக்கேட்ட நீதிபதிகள், ‘‘இதுவரை விசாரணை நடத்தி வந்த சிறப்பு புலனாய்வு குழு சரியாக செயல்படவில்லையா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ‘‘தலைமையிலான சிறப்பு விசாரணை குழு கடந்த ஓராண்டாகியும் அரசுக்கு எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, சிபிஐ விசாரணை நடத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது’’ என்றார். இதையடுத்து, சிபிஐ விசாரணை நடத்துவது தொடர்பான அரசாணையை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி அரசுத் தரப்பில் அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து நீதிபதிகள் மகாதேவன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. அதன்படி பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசின் ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம்.ஜோசப் ஆகியோர், அடங்கிய உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம். அதே நேரத்தில் அவரது விசாரணை அறிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமாரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த சிறப்பு டிவிஷன் பெஞ்சை அமைப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணையில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதில், சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அமர்வு கலைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இந்த சிறப்பு டிவிஷன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்குகள், மனுக்கள் தற்போது அந்தந்த பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு (போர்ட்போலியோ நீதிபதிகள்) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாமல், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நீதிமன்றங்களில் நடைபெறும்.

Tags : Registrar ,Special Session of Special Procedure to Investigate Statue Abuse Case: Notification of High Court , Statue abduction case, inquiry, special session, sudden dissolution, high court registrar
× RELATED பாரதியார் பல்கலையில் முன்னாள் மாணவர் சந்திப்பு