×

கடும் குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: நிலத்தில் தண்ணீர் இருக்கா...நல்லா பார்த்து சொல்லுங்க...தேனி புவியியல் தகவல் மையத்தில் குவியும் மக்கள்

தேனி: மாநிலத்தில் போர்வெல் வறண்டு விட்டது. தண்ணீர் எத்தனை அடி ஆழத்தில் உள்ளது, நல்லா பார்த்து சொல்லுங்க’ என தேனி புவியியல் தகவல் மையத்தில் தினமும் ஏராளமானோர் மனு கொடுத்து வருகின்றனர்.தேனி மாவட்டத்தில் சின்னமனுாரில் பெரியாற்று நீர் பாயும் பகுதிகள், போடியில் கொட்டகுடி நீர் பாயும் பகுதிகளில் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் சுமாராக உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 1000ம் அடிக்கு கீழே  சென்று விட்டது. இதனால் விவசாய பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட போர்வெல்கள் வறண்டு விட்டன. தங்களது போர்வெல்லை இன்னும் எத்தனை அடி ஆழப்படுத்தினால் தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகளுக்கு தெரியவில்லை. ஆகையால்  இவர்கள் நிலத்தில் எத்தனை அடியில் தண்ணீர் உள்ளது என்பதை கண்டறிந்து சொல்லுமாறு தேனி புவியியல் ஆய்வு மையத்தில் மனு கொடுத்து வருகின்றனர்.

விவசாயிகள் 500 ரூபாய் கட்டணம் செலுத்தினால் அவர்களது நிலத்திற்கு சென்று தண்ணீர் உள்ளதா?, எத்தனை அடி ஆழத்தில் உள்ளது என்ற விவரங்களை அதிகாரிகள் பார்த்து சொல்லி விடுவார்கள். தவிர உள்ளாட்சிகளிலும் போர்வெல்கள் வறண்டு வருவதால், உள்ளாட்சி நிர்வாகங்களும், தங்களது பகுதியில் எந்த இடத்தில் நிலத்தடி நீர் வளம் உள்ளது என பார்த்து சொல்லுமாறு மனு கொடுத்து வருகின்றன.  விவசாயிகள் தவிர்த்து  மற்றவர்கள் தங்கள் பகுதியில் நீரோட்டம் பார்க்க ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளாட்சிகள் இந்த ஆயிரம் ரூபாய் கட்டணத்தை எளிதில் கட்டி விடுகின்றன.

குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளாட்சிகளில் முதலில் நீரோட்டம் பார்த்து சொல்லுங்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இங்கு ஒரே ஒரு உதவி புவியியலாளர் பணியிடம் மட்டுமே உள்ளது. குவியும்  மனுக்களால் விவசாயிகளின் மனுக்களுக்கு தீர்வு சொல்வதா அல்லது உள்ளாட்சிகளின் மனுக்களுக்கு தீர்வு சொல்வதா என புவியியலாளர் தவித்து வருகிறார். இந்நிலையில், திண்டுக்கல்லுக்கும் தேனி உதவி புவியியலாளர் ‘இன்சார்ஜ்’ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தின் நிலை தேனியை விட மிகவும் மோசம். எனவே இருமாவட்டங்களிலும் விவசாயிகள், உள்ளாட்சிகளிடம்  இருந்து குவியும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தேனி புவியியல் தகவல் மையம் தவித்து வருகிறது.

Tags : Geographical Information Center , Water shortage, Water, Theni, Geographic Information Center, People
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை