நெல்லை முக்கிய நிர்வாகிகள் ஓட்டம்: அதிமுகவுக்கு தாவியவர்கள் ‘சுயநலவாதிகள்’: அமமுகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு இசக்கிசுப்பையா தலைமையில் முக்கிய முடிவு

நெல்லை: தென் மாவட்டத்தில் தங்களின் சுய நலத்திற்காக அமமுக நிர்வாகிகள் அதிமுகவிற்கு படையெடுத்து வருகின்றனர். இதையொட்டி குற்றாலத்தில் முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய  முடிவு எடுக்கப்பட்டது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் என பல்வேறு அணிகளாக பிரிந்தது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதும், ஓபிஎஸ், எடப்பாடி அணியுடன் இணைந்தார். இதையடுத்து அவருக்கு துணை  முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் டிடிவி தினகரன் அமமுக என்ற புதிய கட்சியை தொடங்கி ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களை நிறுத்தியது. ஒரு ெதாகுதி மட்டும் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் 22 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக வேட்பாளர்கள்  போட்டியிட்டனர். மக்களவை தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் பல தொகுதிகளில் அமமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை. இதையடுத்து அமமுக முக்கிய நிர்வாகிகள் பலர் அதிமுகவிற்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ஆர்பி ஆதித்தன், அண்ணாமலை ஆகியோர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தனர். இந்நிலையில் நெல்லை தொகுதியில்  அமமுக வேட்பாளராக போட்டியிட்ட ைமக்கேல் ராயப்பன், நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் பாப்புலர் முத்தையா, பாளை மண்டல முன்னாள் தலைவர் எம்சி ராஜன், பாளை பகுதி செயலாளர் அசன் ஜாபர் அலி, மாநில  இளைஞரணி இணைச் செயலாளர் வை. சின்னத்துரை, புறநகர் மாவட்ட நிர்வாகி வி.பி.மூர்த்தி மற்றும் பலர் அதிமுக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், விஜிலா சத்யானந்த் எம்பி ஆகியோருடன் சென்று முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமியை சந்தித்து அவரது முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.

அமமுக மிகவும் வலுவாக இருந்த நெல்லை மாவட்டத்திலேயே அடுத்தடுத்து நிர்வாகிகள் அதிமுகவிற்கு தாவி வருவதால் அமமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பல நிர்வாகிகள் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகி உள்ளது.
இதுகுறித்து நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் கூறியதாவது:- அதிமுகவில் இணைந்துள்ள நிர்வாகிகள் தங்கள் சுயநலத்திற்காக அக்கட்சியில் ேசர்ந்துள்ளனர். சிலர் தங்களது குடும்பத்தில் வேலைவாய்ப்புகளை  பெறுவதற்காகவும், தாங்கள் செய்து வரும் தொழிலுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகவும் அக்கட்சியில் இணைந்துள்ளனர். அவர்கள் பின்னால் தொண்டர்கள் யாரும் செல்லவில்லை.

குற்றாலத்தில் முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் 500க் கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் கட்சி தலைமைக்கு கட்டுப்படுவதாகவும்,  பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் கட்டளைக்கு கட்டுப்படுவோம் என்றும் சபதம் எடுத்துள்ளனர். பாராளுமன்ற தேர்தல் முடிவு கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தவில்லை. அது பாஜவுக்கு எதிராக மக்கள் எடுத்த முடிவு. எனவே அங்கு சென்றவர்கள் மீண்டும் டிடிவி தினகரன் தலைமையை ஏற்கும் காலம் விரைவில் வரும். நெல்லை  மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அதிமுகவில் உள்ள ஒரு கோஷ்டியினர், தற்போது இருக்கும் நிர்வாகிகளை நீக்கி விட்டு தாங்கள் அந்த இடத்திற்கு வருவதற்கு முயற்சி  செய்கின்றனர். விரைவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்படும் என்பது தான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

காணாமல் போய்விடும்: மாவட்ட பொருளாளர் பால்கண்ணன் கூறுகையில், தமிழகத்தின் வாழ்வாதாரங்களை மத்திய அரசிடம் அடகு வைத்ததன் மூலம் ஜெயலலிதா கட்டிக்காத்து வந்த அதிமுகவில் 42 சதவீதமாக இருந்த வாக்கு விகிதம் இபிஎஸ், ஓபிஎஸ் ஆட்சியில் 2 ஆண்டில் 18 சதவிதமாக குறைந்துள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக காணாமல் போய்விடும். சசிகலாவின் வழிகாட்டுதலின்பேரில் டிடிவி தலைமையில் மீண்டும்  அமமுக எழுச்சி பெறும். அப்போது சுயநலத்திற்காக சென்றவர்கள் திரும்பும் காலம் ஏற்படும் என்றார்.

Tags : Chief Executive Officer ,Nellai ,The Swayamsevaks 'Selfish People , Chief executives of Nellai, AIADMK, selfish people, Ammukha, Isakispuppaiya
× RELATED குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நெல்லையில் கண்டனப் பேரணி