×

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 2.04 மீட்டர் முதல் 3.47 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது: 5 மாத அரசு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த 5 மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து கொண்டே வருகிறது. அரசின் அறிக்கையின்படி வேலூர் மாவட்டத்தில் 2.04 மீட்டரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 3.47 மீட்டர் நிலத்தடியும்  குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. கத்திரி வெயில் தொடங்கும் முன்பே மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்தது. இருப்பினும் இடையிடையே ஆங்காங்கே  கோடை மழை பெய்தததால் ஓரளவு வெயில் குறைந்து மீண்டும் உயர்ந்தது.  கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஏரி, குளங்கள் வறண்டு போனதோடு, பல போர்வெல்களிலும் தண்ணீர் வற்றிவிட்டது. கடந்த டிசம்பர், ஜனவரி மாதத்தில் வடகிழக்கு  பருவமழை பொய்த்ததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரி, குளங்கள் வறண்டது. அதேபோல், விவசாய கிணறு, போர்வெல்களிலும் தண்ணீர் குறைந்தது.

குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த 5 மாதங்களில் 2 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 8.73 மீட்டர் என இருந்தது. இது மே  மாதத்தில் 10.77 மீட்டராக குறைந்துள்ளது. இதன் மூலம் 2.04 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் 6.90 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம், கடந்த மாதம் நடத்திய ஆய்வில் 10.37 மீட்டரில் நிலத்தடி நீர் கிடைக்கிறது. ஜனவரி மாதத்துடன் மே மாதம் நடந்த ஆய்வை  ஒப்பிடுகையில், 3.47 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள 250க்கும் மேற்பட்ட ஏரிகளில் ஒரு சொட்டு நீர்கூட இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில்  பெரும்பாலான ஏரிகள் வறண்டன.  
 
இதற்கிடையில், கடந்த சில தினங்களாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் சற்றே மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் பல இடங்களில் மழைநீர், கழிவுநீருடன் கலந்து வீணாகியது. தமிழகத்தில் தொடங்க உள்ள தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக ஏரி, குளம், நீர்வரத்து கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும். மேலும் அரசு அலுவலகங்கள், குடியிருப்பு  உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூகஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Vellore ,Tiruvannamalai Districts , Vellore, Thiruvannamalai, groundwater, state report
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!