கருவேப்பிலங்குறிச்சி அருகே நள்ளிரவில் தீவிபத்து...வீடு, பழக்கடை எரிந்து ரூ.1 லட்சம், பொருட்கள் சாம்பல்: தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் வீடு, பழக்கடை எரிந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சாம்பலானது. தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத் தால் ்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் (67), விவசாயி. இவர் ராஜேந்திரபட்டினம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் கூரை வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் திடீரென இவரது கூரை வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் கலியபெருமாள் மற்றும் குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர்.

  அவர்களின் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தீ மளமளவென எரிந்து அருகில் இருந்த ரவிகுமார் என்பவரின் பழக்கடையும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து விருத்தாசலம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் கலியபெருமாளின் வீட்டில் இருந்த ரொக்கப்பணம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள், துணிமணிகள் ஆகியவை எரிந்து சாம்பலாயின. ரவிக்குமாரின் பழக்கடையில் இருந்த பழம் தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் கடைகளில் எரிந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும்.  இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் விவசாயி வீடு மற்றும் அருகில் உள்ள பழக்கடை எரிந்து சாம்பலான சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.× RELATED பிரபல ஓட்டலில் தீ