தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 12-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்: சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ம.சுப்பிரமணியன் சஸ்பெண்ட செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்  சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் விருதுநகர் மாவட்டம் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையில் பணிபுரிந்தார். கடந்த மே 31 ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துணை பி.டி.ஓ.,ஆக பணிபுரிந்த போது தொகுப்பு  வீடுகளை தகுதியில்லாத பயனாளிகளுக்கு ஒதுக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னின்று நடத்தியதால்  அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டி, கடந்த 3-ம் தேதி (நேற்று) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் ஜாக்டோஜியோ அமைப்பினர் 100-ம் மேற்பட்டோர் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இதற்கிடையே, அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ம.சுப்பிரமணியன் மே 31-ந்தேதி ஓய்வுபெற இருந்த நிலையில் இந்த அரசு பணி ஓய்வுபெற  விடாமல் தடுத்துள்ளது. மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. அவரை அச்சுறுத்துதல் மூலம் அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசு ஊழியர்கள் அரசுடன் சுமூகமான  உறவுடன் செயல்பட நினைத்தாலும் அது தேவையில்லை என்று கருதி வெறுப்பு மனப்பான்மையில் அரசு செயல்படுகிறது. இந்த பழிவாங்கும் அரசியலை ஒரு முடிவுக்கு கெண்டு வந்து அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கும் அரசுக்கும் இடையே  ஒரு இணக்கமான உறவை முதல்வர் பழனிசாமி ஏற்படுத்த வேண்டும். அரசின் செயல்பாடுகள் எங்களை மீண்டும் போராட்டத்துக்கு நிர்பந்தித்து உள்ளது. இந்த பிரச்சனையில் முதல்வர் உடனடியாக தலையிடாத பட்சத்தில் தொடர்  போராட்டங்களை முன்னெடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அரசின் அடக்கு முறைகளை கண்டிக்கும் விதமாகவும், சுப்பிரமணியனின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அவர் பணி ஓய்வுபெற அனுமதிக்கப்படும் வரை இந்த தொடர் போராட்டங்கள்  தொடரும் என்றும் வரும் 12-ம் தேதி முதல் சென்னையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்கும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது எனவும், அரசின் கண்டு கொள்ளாத போக்கு தொடருமேயானால் 16-ந்தேதி மாநில  செயற்குழு கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட தீவிர போராட்டத்தினை உறுதி செய்து அறிவிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Tamilnadu Government Employees Union ,Union General Secretary ,hunger strike , Tamilnadu Government Employees Union on the 12th Day of the hunger strike: Union General Secretary
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் உண்ணாவிரத போராட்டம்