×

தோள்பட்டடை காயத்தால் அவதி..: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார் டேல் ஸ்டெய்ன்!

சவுத்தம்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விலகியுள்ளார். 12வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. அடுத்தடுத்த தோல்வியால் தென்னாப்பிரிக்கா அணி சோகத்தில் உள்ளது. மூன்றாவது போட்டியிலும் பலம் வாய்ந்த இந்திய அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். தோள்பட்டை காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகுவதாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. காயம் காரணமாக ஏற்கனவே அவர் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடவில்லை. ஸ்டெய்னுக்கு மாற்றாக பியூரான் ஹெண்ட்ரிக்ஸ் தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாளை இந்தியாவுக்கு எதிரான போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஸ்டெயின் இந்த தொடரில் இருந்தே விலகியுள்ளது அந்த அணிக்கு இழப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஸ்டெயின் இதுவரை 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 2015ம் ஆண்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சிறப்பு ஸ்டெயினுக்கு இருக்கிறது. தற்போது ஸ்டெயினுக்கு 35 வயதாகிறது, ஏற்கெனவே தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஸ்டெயின் சமீபத்தில்தான் விளையாட வந்தார். இப்போது மீண்டும் தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவதால், ஏறக்குறைய அவரின் கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. களத்தில் ஆக்ரோஷமாக பந்துவீசக்கூடியவர், பந்துகளை விரைவாக டெலிவரி செய்யக்கூடிய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்ற ஸ்டெயின் இல்லாதது தென்னாப்பிரிக்கா அணிக்கு பெரும் பின்னடைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Dale Steyn ,cricket series ,World Cup , South Africa,bowler,Dale Steyn,Cricket,World Cup
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...