×

நாடாளுமன்ற தேர்தலில் தனது மகனின் தோல்விக்கு சச்சின் பைலட் பொறுப்பேற்க வேண்டும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆவேசம்

ஜெய்பூர்: நாடாளுமன்ற தேர்தலில் தனது மகன் தோல்வியடைவதற்கு சச்சின் பைலட் தான் காரணம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் 17-வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி  கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 23-ம் தேதி எண்ணப்பட்டன. இதில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி பெற்றது. ஓரிரு மாநிலங்களில் மட்டுமே காங்கிரசும், அதன்  கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன. 430 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் ராகுல் போட்டியிட்ட அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம்  தோல்வியடைந்தார்.

வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். இந்த தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு கூடியது. இந்த கூட்டத்திற்கு ராகுல்காந்தி தலைமை  வகித்தார். இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று தனது கட்சித் தலைவர் பதவியை ராகுல்  ராஜினாமா செய்ய முன்வந்து கடிதம் அளித்ததார். இதனை காங்கிரஸ் காரிய கமிட்டி குழு நிராகரித்தது.

கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ப.சிதம்பரம், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெலாட் ஆகியோர் தங்கள் மகன்களுக்கு எம்.பி. சீட் கேட்டு மிரட்டியதை தெரிவித்தார். முதல்வர்கள் மாநிலம்  முழுவதும் பிரசாரம் செய்யாமல் தங்கள் மகன்களின் தொகுதிகளுக்குள் முடங்கி கிடந்தனர் என்றும் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், எனது மகனுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட்  கேட்கவில்லை என்றும் இது தொடர்பாக ஒருபோதும் நான் ராகுல்காந்தியிடம் பேசியதும் இல்லை” என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநில மக்களவை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், தனது சொந்த தொகுதியான ஜோத்பூரில் 4  லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அசோக் கெலாட்டுக்கு 5 முறை வெற்றியை தந்த ஜோத்பூர் மக்களவை தொகுதி, காங்கிரசின் கோட்டை எனக் கருதப்படும் நிலையில், அவரது தீவிர பிரச்சாரத்திற்கு பிறகும் வைபவ்  கெலாட் தோல்வியடைந்தது, பேரிடியாக அமைந்தது. இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அளித்துள்ள பேட்டியில், ராஜஸ்தானின் ஜோத்பூர் தொகுதியில் போட்டியிட்ட தனது மகன் வைபவ்  கெலாட் தோல்விக்கு, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சச்சின் பைலட் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அசோக் கெலாட்டின் இந்த கருத்து ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sachin Pilot ,Ashok Gehlot ,defeat ,Rajasthan , Parliamentary election, Sachin Pilot, Chief Minister of Rajasthan Ashok Gehlot,
× RELATED மக்கள் மத்தியில் நிலவும் மனநிலையைப்...