×

விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை திட்டத்திற்கு தடைக்கோரி டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்துறை அனுமதி பெறாமல் 25 கிராம நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் எனவே, விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். விழுப்புரத்தில் தொடங்கி நாகை வழியாக தூத்துக்குடி வரை 2 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் பின்னர் இந்த திட்டம் 4 வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. இதற்காக முதல் கட்டமாக விழுப்புரத்தில் இருந்து நாகை வரையிலும், இரண்டாம் கட்டமாக நாகையில் இருந்து தூத்துக்குடி வரையிலும் சாலைகள் போடப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 2006ல் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாரத் மாலா திட்டம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டம் மூலம் ரூ.5,916.95 கோடி மதிப்பில் நான்கு கட்டங்களாக விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையேயான சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யவுள்ளோம். முதற்கட்டமாக 123 கி.மீ. தொலைவுக்கு புதுச்சேரி, பூண்டியாங்குப்பம் வழியாக விழுப்புரத்திலிருந்து சட்டநாதபுரம் வரையில் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியுள்ளது. இதற்காக ரூ.4,446.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே 29 கி.மீ. தொலைவும், புதுச்சேரி - பூண்டியாங்குப்பம் இடையே 38 கி.மீ தொலைவும், பூண்டியாங்குப்பம் - சட்டநாதபுரம் இடையே 56 கி.மீ தொலைவும் உள்ள சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன. எஞ்சிய சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையேயான 56.56 கி.மீ தொலைவு உள்ள சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்துக்காக ரூ.1,470.39 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்றது. இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக திட்டத்தில் அதிகாரிகள் மோசடி செய்து வருவதாக நிலம் வழங்கியவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், மக்கள் கருத்தை கேட்காமலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் நிலம் கையகப்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த மனு மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் கூடுதல் விவரங்கள் தாக்கல் செய்ய, டிராபிக் ராமசாமி தரப்பில் கால அவகாசம் கோரியிருந்ததையடுத்து அடுத்து விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Tribune Ramasamy High Court ,Vilupuram-Nagapattinam 4 , Villupuram-Nagapattinam, 4 paved, high court case
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...