×

தேசிய நதிநீர் இணைப்பில் ஒன்றான கோதாவரி- காவிரி இணைப்பில் பாலாறு சேருமா?

*எதிர்பார்ப்பில் வடமாவட்ட மக்கள்

வேலூர் : இந்திய தேசத்தில் ஒருபுறம் வறட்சியும், மறுபுறம் வெள்ளமும் என்ற சமநிலையற்ற இயற்கை தன்மை நிலவியுள்ளது. நாட்டின் எல்லையில்லா இயற்கை வளத்தை பயன்படுத்த முடியாத நிலையில் ஆண்டுக்கு ₹15 ஆயிரம் கோடி முதல் ₹20 ஆயிரம் கோடி வரை பொருளாதார இழப்பை நாடு சந்தித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண பலரும் வலியுறுத்தி வந்த தேசிய நதிநீர் இணைப்புத்திட்டத்துக்கான வெளிப்படையான யோசனையை மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், மத்திய அரசு பணியில் இருந்த பொறியாளர் கே.எல்.ராவ் கடந்த 1972ம் ஆண்டு வெளியிட்டார். அவரது யோசனைப்படி கங்கை-காவிரி இடையே இணைப்புக்கால்வாய் அமைக்கப்பட்டால், பீகார் மாநிலம் பாட்னா அருகே வெள்ளமாக பாயும் 60 ஆயிரம் கியூசெக்ஸ் கங்கை நீர் தென்மாநிலங்களுக்கு திருப்பிவிடப்படும். இது ஒட்டுமொத்த தென்மாநிலங்களின் 150 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் அந்த அறிக்கையில் கே.எல்.ராவ் கூறினார்.

இவரது யோசனையை ஆய்வு செய்த வல்லுனர் குழு இத்திட்டம் நடைமுறையில் சாத்தியமில்லை என்றும், விந்தியமலைகளுக்கு அப்பால் தக்காண பீடபூமிக்கு தண்ணீரை கொண்டு செல்ல அதிக மின்விசை தேவைப்படும் என்றும், இதற்கு அதிக செலவு பிடிக்கும் என்றும் கூறி நிராகரித்தது. ஆனால், கே.எல்.ராவ் யோசனைக்கு இணையாக ‘கேர்லேண்ட் கெனால்ஸ்’ என்ற திட்டத்தை கேப்டன் டஸ்டர் என்பவர் கடந்த 97ம் ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பித்தார். இவரது பரிந்துரையில், இமயமலைத்தொடரில் இருந்து உற்பத்தியாகும் நதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் நதிகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில், கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இத்திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு ₹ 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவாகும் என்பதால் அதுவும் கிடப்பில் போடப்பட்டது. அதற்கு பதில், நீர்வளங்களை மேம்படுத்துவதற்காக, ‘இமாலய ஆறுகள் மேம்பாட்டுத் திட்டம்’ என்றும், இரண்டாவது ‘தீபகற்ப ஆறுகள் மேம்பாட்டுத் திட்டம்’ என்று இரண்டு தொகுதிகளாக கொண்ட ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. இதற்காக தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் என்னும் பெயரில் ஒரு தன்னாட்சி அமைப்பு 1982ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவ்வாணையம் முதலில் தீபகற்ப ஆறுகளுக்கான திட்டத்தை வகுத்தது.

ர்வளம் உபரியாக உள்ள பகுதிகளிலிருந்து பற்றாக்குறை பகுதிகளுக்கு உபரி நீரை கொண்டு செல்வதற்கு ஏராளமான இணைப்புக் கால்வாய்களை அமைக்கலாம் என்று தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் தனது ஆலோசனையை மத்திய அரசுக்கு வழங்கியது. அதன்படி மகாநதியில் இருந்து கடலில் சேரும் 8 ஆயிரம் டிஎம்சி நீரை கோதாவரிக்கு திருப்பலாம் என்று தனது  ஆலோசனையில் மத்திய நீர்வள மேம்பாட்டு ஆணையம் சிபாரிசு செய்தது. இதற்காக ஹிராகுட் அணையின் அருகே மணிபந்திராவில் மற்றொரு அணை கட்டப்பட வேண்டும் என்று கூறியது. அங்கிருந்து தவுலேஸ்வரம் அணைக்கு நீரை கொண்டுவர எந்த மின்விசையும் தேவைப்படாது. மேலும் தவுலேஸ்வரம் அணையின் மேற்பகுதியில், கோதாவரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள போலாவரம் அணையின் அருகில் மற்றொரு அணை கட்டி, 21,550 டிஎம்சி நீரை கிருஷ்ணா நதிக்கு கொண்டு செல்லலாம்.

இதன்படி, கோதாவரியிலிருந்து உபரிநீரை கிருஷ்ணா நதிக்குத் திருப்பி விடுவதற்கான மூன்று இணைப்புகள் அமைக்கத் திட்டம் வகை செய்கிறது. முதலாவதாக, பிரகாசம் அணை அருகே 1,200 டிஎம்சி நீரை கொண்டு சேர்ப்பதற்காக, போலவரம்-விஜயவாடா இணைப்பு கால்வாய், 4,370 டிஎம்சி நீரை கொண்டு செல்ல இச்சம்பள்ளி - புளிச்சிந்தலா இணைப்புக்கால்வாய் அமைக்கப்பட வேண்டும். மூன்றாவதாக இச்சம்பள்ளி - நாகார்ஜூனசாகர் இணைப்புக்கால்வாய் அமைக்கப்பட வேண்டும். இது, சுமார் 14,000 டிஎம்சி நீரை நாகர்ஜூனசாகர் அணைக்குக் கொண்டு செல்லும். அங்கிருந்து பெண்ணாற்றின் குறுக்கே உள்ள சோமசீலா அணைக்கு 12,000 டிஎம்சி நீரை மாற்றலாம். அதில் 9,800 டிஎம்சி நீரை காவிரிக்கு கொண்டு செல்ல முடியும்.

ஆனால் இப்போதைக்கு மத்திய அரசு கோதாவரி-காவிரி இணைப்பையே பிரதானப்படுத்துகிறது. இத்திட்டத்துக்காக தேவைப்படும் 1.68 லட்சம் ஏக்கர் நிலத்தில் 1.19 லட்சம் நிலத்தை கையகப்படுத்தி பணியை ேவகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்துக்காக தேவைப்படும் ₹67 ஆயிரம் கோடியில் ₹14 ஆயிரம் கோடியை அம்மாநில அரசு செலவிட்டுள்ளது. கோதாவரி நீரில் 100 டிஎம்சி நீரை காவிரிக்கு கொண்டு வரும் திட்டத்தை, ₹60 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள கோதாவரி-காவிரி இணைப்புத்திட்டத்தின் தொடர்ச்சியாக காவிரி-வைகை-குண்டாறு நதிகளும் இணைக்கப்பட உள்ளன.

அதேநேரத்தில் வடபெண்ணையில் இருந்து தென்பெண்ணைக்கு கொண்டு வரப்படும் கோதாவரி நீரை பாலாற்றுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வடமாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். இதற்காக கிருஷ்ணாவில் கலந்து ஓடி வரும் கோதாவரி நீரில் 5 முதல் 10 டிஎம்சி தண்ணீரை துங்கபத்திராவுக்கு கொண்டு வந்து அங்கிருந்து சம அளவிலான உயரத்தில் உள்ள நதிகளை இணைக்கும் ‘கேன்டுர் கேனல்’ தொழில்நுட்பம் மூலம் அமைக்கப்படும் தனிக்கால்வாய் மூலம் கோலார் மாவட்டம் பேத்தமங்களாவில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இதன் மூலம் பாலாற்றுக்கு நிரந்தர நீர்வரத்தை ஏற்படுத்த செய்ய முடியும். இதற்காக கோதாவரி- காவிரி இணைப்புத்திட்ட மதிப்பில் கூடுதலாக ₹200 முதல் ₹250 கோடி வரையே செலவாகும் என்றும், இதன் மூலம் தேசிய நதிநீர் இணைப்புத்திட்டத்தில் பாலாறும் இணையும் என்றும் வேலூர் உட்பட வடமாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கேன்டூர் கேனல்ஸ் என்றால் என்ன?

நதிநீர்  இணைப்பில், நீர் மேலாண்மை திட்டங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாக கேன்டூர் கேனல்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நதி நீர்  இணைப்புக்கால்வாய்கள், ஏரி இணைப்புக்கால்வாய்கள், அணைகளில் இருந்து  நீர்நிலைகளுக்கு செல்லும் கால்வாய்கள் அமைக்கப்படும் போது சமதள பரப்பில்  கால்வாய்களை அமைத்து அதன் மூலம் நீர் தடையின்றி செல்வதற்கு வழி  ஏற்படுத்துவதே கேன்டூர் கேனல்ஸ் எனப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே பரம்பிக்குளம்-ஆழியாறு இணைப்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோதாவரி-காவிரி இணைப்பில் பாலாற்றுக்கு  நீர் கொண்டு வரும் கால்வாய் கிருஷ்ணாவில் இருந்து அனந்தப்பூர் துங்கபத்திரா வரை ஒரு கால்வாயும், துங்கபத்திராவில் இருந்து பேத்தமங்களா அணைக்கு சமதள  கால்வாயும் அமைக்கப்பட வேண்டும் என்பதே விவசாயிகள் கோரிக்கை.

கர்நாடகத்தின் நேத்ராவதி திட்டம்

கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் சென்று கலக்கும் நேத்ராவதியின் மொத்த நீளமே ஏறத்தாழ 40 கி.மீ ஆகும். ஆண்டுக்கு 6 ஆயிரம்  டிஎம்சி தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று கலக்கிறது. இதில் 11.6 டிஎம்சி தண்ணீரை, கடும் குடிநீர் பற்றாக்குறையால் தத்தளிக்கும் பெங்களூரு ஊரகம்,  கோலார், சிக்கபெல்லாபூர், தும்கூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கொண்டு சென்று  வழங்கும் ‘ஹெத்தின ஹோலே’ திட்டத்தை கர்நாடக அரசு கையில் எடுத்துள்ளது.

இதற்காக  ₹10,600 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு ஏறத்தாழ 800 கி.மீ தூரத்துக்கு  கால்வாய், பைப் லைன் ஆகியவற்றின் மூலம் கொண்டு கோலார் வரை கொண்டு வரப்படும் நேத்ராவதியின் 11.6 டிஎம்சி தண்ணீர் பேத்தமங்களா ஏரியில் விடப்படும். இதற்காக வழியில் 13 இடங்களில் நீரேற்று நிலையங்கள், அதிசக்திவாய்ந்த  மோட்டார்கள் மூலம் நீர் மேடான பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது.

ஹந்திரி-நீவா திட்டத்தையும் சேர்க்கணும்

அனந்தப்பூர், கடப்பா, சித்தூர், நெல்லூர் என ஆந்திராவின் ராயலசீமா பகுதியின் குடிநீர் தேவை, விவசாய தேவைக்கான தண்ணீரை பெற ஹந்திரி-நீவா திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்  கீழ் கிருஷ்ணாவின் துணை நதியான ஹந்திரியை இருந்து சித்தூர் மாவட்டம் நீவா நதி எனப்படும் பொன்னையாற்றுடன் இணைப்பது.  இத்திட்டம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இத்திட்டத்தின் ஒரு  பகுதியாக சித்தூர் மாவட்டம் மதனப்பல்லியில் இருந்து மற்றொரு கால்வாய்  வெட்டப்பட்டு ஹந்திரி நீர் தமிழக எல்லையான கனகநாச்சியம்மன் பாலாற்று படுகை  வரை கொண்டு வரப்படுகிறது.  ஒரே கல்லில்  இரண்டு மாங்காய் என்ற கணக்கில் பாலாற்றுக்கு வரும் நீரையும் தடுப்பதுடன், ஹந்திரி நீரையும் சேமிப்பது என்ற இரண்டு நோக்கங்களை அம்மாநில அரசு  நிறைவேற்ற துணிந்துள்ளது.

திட்டம் சாத்தியம்தான்

இதுகுறித்து பாலாறு பாதுகாப்பு இயக்கம் பாலாறு வெங்கடேசனிடம் கேட்டபோது, ‘கோதாவரி-காவிரி இணைப்பில் பாலாற்றை சேர்ப்பது சாத்தியமான ஒரு திட்டம்தான். இதற்காக அனந்தப்பூர் மாவட்டம் வழியாக ஓடி வரும் துங்கபத்திரா நதியுடன் கிருஷ்ணாவை இணைக்க ஒரு கால்வாய் அமைக்க வேண்டும். அங்கிருந்து சித்ரதுர்கா, கோலார் மாவட்டம் வழியாக பாலாற்றின் பேத்தமங்களா அணை வரை ஒரு கால்வாய் அமைத்து 10 டிஎம்சி தண்ணீரை கொண்டு வரலாம். பேத்தமங்களாவில் இருந்து கர்நாடகம் ஒன்று முதல் 3 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்திக் கொண்டால் கூட, நமக்கு மழைக்காலங்களில் வரும் நீர் வரத்து அதனை சரி செய்வதுடன், அவர்களால் பாலாற்றின் வழியாக வரும் நீரை தடுக்க முடியாது.

 அதோடு அவர்கள் திட்டமிட்டுள்ள நேத்ராவதி-பாலாறு இணைப்புத்திட்டமும் நிறைவேறும் பட்சத்தில் பிரச்னை எழாது. அதேபோல், ஆந்திர அரசு நிறைவேற்றியுள்ள ஹந்திரி-நீவா திட்டத்தின் கீழ் தமிழக எல்லை வரை பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம் சேர்க்கப்படும் நீரில் 2 டிஎம்சி தண்ணீரை தமிழக அரசு ஆந்திராவுடன் பேசி பெறலாம். ஏற்கனவே நாங்கள் முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடுவிடம் பேசிய போது பாலாற்றில் கிருஷ்ணா நீரை விடுவது தொடர்பாக கேட்டபோது, ‘உங்கள் முதல்வரை பேச சொல்லுங்கள்’ என்றே சொன்னார். அப்போதைய சூழலை விட இப்போது நல்ல சூழல் உள்ளது. தமிழக அரசு ஆந்திர அரசுடன் பேச வேண்டும். இதன் மூலம் பாலாற்றை காப்பாற்ற முடியும்’ என்று கூறினார்.

Tags : Palaras ,rivers ,Godavari-Kaveri , Godavari,Cauvery ,Water project,paalaru
× RELATED குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு...