×

பகுஜன் - சமாஜ்வாதி கூட்டணி முறிவு: உத்தரபிரதேச இடைத்தேர்தலில் தனித்து போட்டி என மாயாவதி, அகிலேஷ் அறிவிப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள 11 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக  மாயாவதி அறிவித்துள்ளார். தனித்துப் போட்டியிட்டாலும் அகிலேஷ் உடனான நட்பு தொடரும் என்று கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொண்ட நிலையில், மாயாவதி திடீர் முடிவை எடுத்துள்ளார். அதேபோல, மாயாவதி தனித்து போட்டியிட்டால் சமாஜ்வாதியும் தனித்து போட்டியிடும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில், எதிர் எதிர் திசைகளில் அரசியல் செய்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து தோ்தலை சந்தித்தன. ஆனால், இந்த கூட்டணி 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

இவா்களை எதிா்த்து போட்டியிட்ட பாஜக அதிகபட்சமாக 62 இடங்களில் வெற்றி பெற்றது. தோ்தல் முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணியில் சலசலப்புகள் ஏற்பட்டன. நாங்கள் தனித்துப் போட்டியிட்டிருந்தால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம் என்று இரு கட்சிகளும் தனித் தனியே கருத்து தெரிவித்திருந்தன. இதையடுத்து, விரைவில் நடக்க உள்ள 11 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனியாக தேர்தலை சந்திக்க தயாராகுமாறு பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களை அக்கட்சித் தலைவர் மாயாவதி கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று மாயாவதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, மாயாவதி தனித்து போட்டியிட்டால் சமாஜ்வாதியும் தனித்து போட்டியிடும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Tags : Mayawati ,Akhilesh ,break ,Bahujan Samaj Party ,UP , Bahujan, Samajwadi, Independent Competition, Uttar Pradesh
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு