×

சேலம் அருகே பரபரப்பு சம்பவம் மாணவனை கடத்திச்சென்று ஊசியால் குத்தி சித்ரவதை

*தங்கையை போட்டோ எடுத்ததை தட்டிக்கேட்டதால் கும்பல் வெறிச்செயல்

காடையாம்பட்டி : காடையாம்பட்டி அருகே தங்கையை போட்டோ எடுத்த வாலிபரை தட்டி கேட்ட ஆத்திரத்தில், 3 வாலிபர்கள் சேர்ந்து இரவு நேரத்தில் மாணவனை தூக்கிச் சென்று உடல் முழுவதும் ஊசியால் குத்தி சித்ரவதை செய்தனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தும்பிபாடி ஊராட்சி ரெட்டியூர் பகுதியை  சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி ஜோதி. கூலி தொழிலாளியான இவர்களுக்கு ஹரிஹரன் (17) என்ற மகன் உள்ளார். இவர் சேலத்தில் உள்ள அரசு தொழில்பயிற்சி  நிலையத்தில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். தங்கராஜ் ஏற்கனவே இறந்துவிட, தாய் ஜோதி கூலி வேலை செய்து தனது மகனை படிக்க வைத்து வருகிறார்.

இந்த நிலையில், இவரது சித்தியின் 14 வயது மகளை அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர், தனது செல்போனில் படம் பிடித்து தனது நண்பர்களிடம் காட்டி வந்துள்ளார். இதையறிந்த ஹரிஹரன், இது போன்று சிறுமிகளை படம் பிடிக்கக்கூடாது எனக் கூறி கண்டித்தார். மேலும் அவரது உறவினர்களிடம் கூறி, வாலிபரின் செல்போனில் இருந்த புகைப்படத்தை அழிக்கச்   செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், அவரது தம்பி ராஜேஷ், அவரது நண்பர் செல்வராசன் ஆகியோர், நேற்று இரவு 7 மணியளவில் வெளியில் சென்ற மாணவர் ஹரிஹரனை 3 பேர் சேர்ந்து வாயில் துணியை அடைத்து தூக்கிச் சென்றனர்.

அங்குள்ள பாறைக்கு கொண்டு சென்ற மாணவரை ஊசியால் உடல்  முழுவதும் சுமார் 50 இடங்களில் குத்தி சித்ரவதை செய்துள்ளனர். மேலும் பாறை மேல் இருந்து கீழே தள்ளி கொலை செய்யவும் முயன்றுள்ளனர். மாணவனின் வாயை துணியால் அடைத்ததால் கூச்சலிட முடியாமல் அவர் முனகினார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் முனகல் சத்தம் கேட்டதை அறிந்து பார்த்தார். அப்போது, 3 பேரும் மாணவனை அடித்துக்கொண்டு இருந்ததை கண்டு சத்தம் போட, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதைப்பார்த்த 3 பேரும் மாணவனை விட்டு விட்டு தப்பியோடினர். இதைத்தொடர்ந்து  மாணவரை மீட்ட உறவினர்கள், ஓமலூர் அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவருக்கு சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாணவர் ஹரிகரன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார், குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்யாமல் சுணக்கம் காட்டி வருவதாக மாணவரின்  உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி ஊசியால் குத்தி சித்ரவதை செய்த வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : incident ,student ,Salem , Salem ,Student , kidnap,torchered,unidentified persons
× RELATED சீர்காழி அருகே குளம் ஏலம் எடுப்பதில்...