பர்கூர் அருகே ஆந்திர எல்லையில் இருளர் இன மக்களின் வனதேவதை திருவிழா

* ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
* ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள பெரியமலை வனப்பகுதியில், வனதேவதை திருவிழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள பெரியமலை வனப்பகுதியில், இருளர் இனமக்கள் வழிபடும் வனதேவதை, வனமுனி அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வனதேவதை திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கடந்த 23ம் தேதி, கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, ஜவுக்குப்பள்ளம் இருளர் காலனியில் தொடங்கிய அம்மன் ஊர்வலம், காரகுப்பம், பூமலைநகர், ஐகுந்தம், எலிமேடு, கொத்தப்பள்ளி, புதுகுளம், எலந்ததோப்பு, ஓடக்கரை, கீழ்வணக்கம்பாடி, ராவந்தவாடி, சின்னகந்தம்பட்டி, ஜமுனாமுத்தூர், கோமுட்டேரி, ஆர்.பட்டி, எ.மோட்டூர், அத்திகுட்டை ஆகிய கிராமங்களில் உள்ள இருளர் காலனிகள் வழியாக நடந்தது.

கடந்த 2ம் தேதி அத்திகுட்டை ஐகுந்தம் வழியாக கொல்லப்பள்ளி பெரியமலைக்கு அம்மன் ஊர்வலமாக வந்தடைந்தது.  வனத்திற்கு சென்று, வழிபாட்டுக்கு தேவையான தேன், கிழங்கு, தினை மற்றும் பூக்களை இருளர் இனமக்கள் சேகரித்தனர். நேற்று முன்தினம், தாய் வீட்டார் சீர்வரிசை பெரியமலை வனதேவதை கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு, சம்மந்தி வீட்டாரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, கோயில் பூசாரி, வனமுனி அய்யனார் கோயிலில் இருந்து வனதேவதை கோயிலுக்கு கரகம் எடுத்து வந்தார். வழியில் படுத்திருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் மீது பூசாரி நடந்து சென்றார்.

தொடர்ந்து, வனப்பகுதியில் சேகரிக்கப்பட்ட தேன், கிழங்கு மற்றும் பூக்களைக் கொண்டு பூஜை நடத்தப்பட்டது.  வனப்பகுதியில் சேகரிக்கப்பட்ட கிழங்கின் மூலம் செய்யப்பட்ட மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து சென்று, பூக்களால் அலங்கரிங்கப்பட்ட வனதேவதைக்கு வள்ளிக்கிழங்கில் தீபம் ஏற்றினர். விழாவில், 20க்கும் மேற்பட்ட ஆடுகள், 100க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு, நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. திருவிழாவில், தங்களது பாரம்பரிய இசையுடன் நடனமாடி வனதேவதையை இருளர் இனமக்கள் வழிபட்டனர்.

விழாவில், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருளர் இனமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இன்று (4ம்தேதி) கங்கையில் கரகத்தை விடும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.


× RELATED பாவூர்சத்திரம் அருகே எல்லைப்புளியில்...