×

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு திடீரென ஊக்கமருந்து சோதனை: கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சி!

சவுதாம்டன்: இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு திடீரென ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இந்த தொடரில் இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது. சவுதாம்டனில் நாளை நடக்கும் இந்த போட்டிக்காக, இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தென்னாப்பிரிக்க அணி, தான் மோதிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளதால், இந்த போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சக வீரர்களுடன் பயிற்சியில் இருந்த போது வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை, சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.

ஜஸ்பிரித் பும்ராவிடம் 2 விதமான சோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்சுற்றுச் சோதனையில் பும்ராவின் சிறுநீர் எடுத்து பரிசோதிக்கப்பட்டது, அடுத்த 45 நிமிடங்களுக்குப்பின் பும்ராவின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனை குறித்து வெளியான தகவலை மைதான அதிகாரிகளும், இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. இதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஊக்கமருந்து சோதனை செய்ததால் பும்ரா சற்று பதற்றத்துடன் காணப்படுவதாக கூறப்படுகிறது. நாளை உலக கோப்பை 2019 முதல் போட்டியை விளையாட உள்ள இந்தியாவிற்கு இது கடும் அதிர்ச்சிகரமான செய்தியாகவே உள்ளது. மேலும், மற்ற வீரர் யாருக்காவது இது போன்று சோதனை மேற்கொள்ளப்பட்டதா என விவரம் ஏதும் வெளியாகவில்லை. அதோடு பும்ராவுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைக்காக காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Indian ,Jaspir Bumra , Indian team, fast bowler, Jasprit Bumrah, dope test, World Cup
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...