×

மக்களவை தேர்தலில் தோற்றதால் விரக்தி பகுஜன்-சமாஜ்வாடி கூட்டணி முறிகிறது: தனித்து போட்டியிட மாயாவதி முடிவு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் மக்களவை தேர்தலில் சமாஜ்வாடியுடன் அமைக்கப்பட்ட கூட்டணியை முறிக்க, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி முடிவு செய்துள்ளார். அடுத்து, 11 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தல் தனித்து போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், பகுஜன் சமாஜ் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சமாஜ்வாடி 5 இடங்களில் மட்டுமே வென்றது. அதிக இடங்களை பிடித்து மத்தியில் ‘கிங் மேக்கராக’ மாறலாம் என நினைத்த மாயாவதியின் கனவு, இதன் மூலம் தகர்ந்தது. இதனால், பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், டெல்லியில் உத்தரப் பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகளுடன் மாயாவதி நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டது. கூட்டத்தில் பேசிய மாயாவதி, “எம்எல்ஏக்கள், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் மற்றும் கட்சியின் தலைவர்கள் அனைவரும், உபி.யில் நடக்க உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு தயாராக வேண்டும். பகுஜன் சமாஜ் தனது சொந்த அமைப்புக்களை வலுவாக்க வேண்டும். ஓட்டுகளை வாங்கி வெற்றி பெறுவதற்காக கூட்டணி கட்சிகளை சார்ந்து இருக்கக் கூடாது” என்றார். இதன் மூலம், சமாஜ்வாடி கூட்டணியை அவர் முறிக்க முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது. இது பற்றி சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவிடம் கேட்டபோது, மாயாவதியின் அதிகாரப்பூர்வ முடிவுக்காக காத்திருப்பதாக பதிலளித்தார்.



Tags : coalition ,Bhajan-Samajwadi ,Lok Sabha ,Mayawati , Frustrated , Lok Sabha elections,
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல்...