×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் ஆஷ்லி பார்தி: வாவ்ரிங்கா மாரத்தான் போராட்டம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்தி தகுதி பெற்றார்.நான்காவது சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனினுடன் (35வது ரேங்க்) நேற்று மோதிய பார்தி (8வது ரேங்க்) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த கெனின் 6-3 என  வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. எனினும், கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய பார்தி 6-3, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 30 நிமிடத்துக்கு  நீடித்தது.மற்றொரு 4வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் கேதரினா சினியகோவாவை வீழ்த்தினார்.

ஜோகோவிச் முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஜன் லெனார்டு ஸ்ட்ரப்பை (ஜெர்மனி) எளிதாக வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.  மற்றொரு 4வது சுற்றில் ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி 6-2, 6-7 (8-10), 6-2, 6-7 (8-10), 7-5 என 5 செட்களில் கடுமையாகப் போராடி பெனாய்ட் பேரை (பிரான்ஸ்) வீழ்த்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 55 நிமிடத்துக்கு  நீடித்தது.முன்னதாக, நேற்று முன்தினம் நடந்த 4வது சுற்று ஆட்டத்தில் சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா (24வது ரேங்க்), இளம் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் (கிரீஸ், 6வது ரேங்க்) மோதினார். 5 மணி, 9 நிமிட நேரத்துக்கு மாரத்தான்  போராட்டமாக அமைந்த இப்போட்டியில், வாவ்ரிங்கா 7-6 (8-6), 5-7, 6-4, 3-6, 8-6 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.கால் இறுதியில் சுவிஸ் நட்சத்திரங்கள் ரோஜர் பெடரர் - வாவ்ரிங்கா மோதவுள்ளது ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது. மற்றொரு கால் இறுதியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலை ஜப்பானின் கெய் நிஷிகோரி சந்திக்கிறார்.

Tags : French Open Tennis Call , French ,Open Tennis,, Ashley Bharti , Wawringa
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...